Tuesday, April 12, 2016

பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம் பயறுகளை நாசமாக்கும் கம்பளிபூச்சி ஆலோசனை தருகிறது வேளாண்துறை

பயறு வகைகளில் சிவப்பு கம்பளிப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். பயறு வகை பயிர்களில் சிவப்பு கம்பளி புழுக்களின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக பயறு வகைகளான உளுந்து மற்றும் தட்டைப் பயறுகளில் இதன் தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இப்பூச்சியானது இலைகள் அனைத்தையும் வேகமாக தின்று தண்டுகளை மட்டுமே விட்டு வைக்கிறது. 

மேலும், இது வேகமாக பரவக்கூடிய தன்மை உடையது. ஆழமாக உழவு செய்வதால், மண்ணின் கீழே தங்கி உள்ள கூட்டுப் புழுக்கள் மேலே கொண்டு வரப்பட்டு பறவைகளால் அழிக்கப்படுகின்றன. ஊடு பயிராக அல்லது வரப்பை சுற்றி 5 அல்லது 6 வரிசைகள் ஆமணுக்கு செடிகளை நட வேண்டும். சோளம், மக்காச்சோளம் ஆகிய பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும். விதைத்த பின் தொடர்ந்து வறட்சி காணப்படும்போது, இப்பூச்சியின் தாக்குதல் அதிகரிக்கும். 

அதனால் மண்ணின் தன்மையைப் பொறுத்து நீர்ப்பாசனம் செய்து பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். ஆங்காங்கே காணப்படும் வளர்ந்த புழுக்கள் மற்றும் முட்டைக் குவியல்களை பொறுக்கி அழிக்கலாம். வயல்களில் ஆங்காங்கே பறவைகள் அமர்வு குச்சிகள் வைக்கலாம். விதைத்த 15 நாட்களுக்குள் களை நிர்வாகம் செய்யப்பட வேண்டும். என்.பி.வி அல்லது நுண்ணுயிர் கொல்லிகளை தெளிக்கலாம். மேற்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளுடன் பூச்சிக் கொல்லி மருந்துகள் கார்பரில் 50 சதவீதம் அல்லது எக்டேருக்கு குயிலைபாஸ் 1500 மில்லி அல்லது எக்டேருக்கு நூலான் 500 மில்லி  இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

source : Dinakaran

No comments:

Post a Comment