Wednesday, April 20, 2016

தோட்டக்கலைத்துறை ஆலோசனை எலுமிச்சை செடிகளில் வெள்ளை ஈ தாக்குதலை விரட்ட வழி

வேலூர் மாவட்டத்தில் எலுமிச்சை செடிகளில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த பார்த்தீனிய செடிகளை அகற்ற வேண்டும் என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இவை மாவட்டம் முழுவதுமாக பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இச்செடிகளில் மாவுப் பூச்சி மற்றும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் செடிகளின் கொழுந்துகள் முளைப்புத் தன்மையை இழந்துவிடுகின்றன.

மேலும் காய்கள் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகி புள்ளிகள் விழுந்து பழங்களாக மாற தகுதியற்றதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எலுமிச்சை மட்டுமின்றி சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட மற்ற காய்களும் இதே பாதிப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: செடிகளில் மாவுப்பூச்சி மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் ஆரம்ப கட்ட நிலையில் இருந்தால் வேம்பு எண்ணெயை கலந்து அடித்தால் போதுமானது. அதுவே முற்றிய நிலையில் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி புரபனோ பாஸ் கலந்து அடிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீருடன் 6 மில்லி இமியோகுளோபிரிட் கலந்து அடிக்கலாம். அல்லது 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் நீட்டோ மைல் கலந்து கைப்பம்பு மூலம் அடிக்கலாம். பார்த்தீனிய செடிகளின் மூலமே இப்பூச்சி பரவுவதால் விவசாயிகள் இச்செடிகளை உடன் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

source : dinakaran

No comments:

Post a Comment