Sunday, April 10, 2016

மரம் தரும் வரம், நிரந்தரம்!

வருங்காலத்தில் தண்ணீருக்கு நாடுகளிடையே போர் வரும் என்பது நேர்ந்துவிடும் போலிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் முக்கிய எட்டு நகரங்களில் ஒன்றான நாந்தேட் நகரில் தண்ணீருக்காக கலவரம் நிகழும் சூழல் உள்ளது. லத்தூர் மாவட்டத்தில் கலவரத்தைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மே மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.
 தண்ணீருக்காகப் போராடும் மக்களை கட்டுப்படுத்துவது காவல் துறைக்கு இக்கட்டான பணி. லத்தூர் நகருக்குத் தண்ணீர் அளிக்கும் ஏரியின் கொள்ளளவில் ஆறு சதவீதம் தான் உள்ளது. இது எவ்வாறு ஐந்து லட்சம் மக்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்? மாதம் ஒருமுறைதான் வீடுகளுக்குத் தண்ணீர் கிடைக்கும் நிலை. ஏரிகளுக்கு காவல் துறையின் பாதுகாப்பு, தண்ணீர் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு காவல் என்ற அளவில் மாரத்வாடா பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது.
 தண்ணீரின் அருமை தட்டுப்பாடு ஏற்படும்போது புரியும். மழை வெள்ளத்தை நொந்து கொள்பவர்கள் சிந்திக்க வேண்டும்.
 நீர் வளத்திற்கும் பசுமை வனங்களுக்கும் ஒரு பிணைப்பு உண்டு. அதை உணராது இயற்கையை சாடுவதால்தான் பல இடங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தண்ணீருக்குப் போராடும் ஏழை மக்களை அமைதிப்படுத்துவது காவல் துறைக்கு மிகப்பெரிய சவால்.
 பசுமை காடுகள் வானம் குளிர செய்து மழை பொழிய வைக்கிறது என்றால் மிகையில்லை. அது சத்தியம்.
 வன மஹா உத்சவம் என்று சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக மரம் நடும் விழா 1947-லேயே துவங்கியது. முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு பங்கு கொண்டனர்.
 ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் பொது சபை 1971-ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற கருத்தரங்கில், காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவும் வன அபிவிருத்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உலக காடுகள் தினம் மார்ச் மாதம் அனுசரிக்க வேண்டும் என்ற முடிவை பிரகடனப்படுத்தியது. 
 2011-ஆம் ஆண்டு சர்வதேச வனப் பாதுகாப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 21-ஆம் தேதி வனப் பாதுகாப்பு தினம் எல்லா நாடுகளிலும் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நா. பொது சபையின் 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
 பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகளால் சூழப்பட்டுள்ளது. சுமார் 160 கோடி மக்கள் வனங்களை நம்பி உயிர் வாழ்கிறார்கள். கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்பு நில தாவர வகைகள் கொண்ட மாங்ரோவ் காடுகள் புயல், சுனாமி போன்ற பேரிடர் நேர்வுகளின் தாக்கத்தைத் தணித்து மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. 
 காடுகளின் பொருளாதார, சுகாதார, சமுதாய மேம்பாட்டிற்கான பங்களிப்பு மற்றும் சுற்றுப்புற சூழல்பாதுகாப்பு அளிக்கும் வலிமையை உணராமல் மனிதன் மனம்போன போக்கில் அழித்தொழிப்பில் உழல்வதை உணரவைக்கும் வகையில் கடும் நடவடிக்கை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் தலைமை வலியுறுத்தியுள்ளது.
 ஆண்டுதோறும் சராசரி 13 மில்லியன் ஹெக்டேர் பரப்புள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சி தகவல். இம்மாதிரி வனங்களை அழிப்பதால் 20% வரை நச்சு அமிலம் கலந்த வாயு வியாபிப்பதைத் தடுக்க முடியாமல் சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கும் புவியின் வெப்ப அதிகரிப்பிற்கும் வழிவகுக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தலைவர் பான் கி மூன் தனது செய்தியில் வனங்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சி, அதற்கான முதலீடு இந்த வையம் உய்வதற்கான காப்பீடு என்பதை வலியுறுத்தியுள்ளார்.
 இப்போதே நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போவதைப் பார்க்கிறோம். மரங்கள் தான் நீர் நிலைகளின் பாதுகாவலன். காடுகளும் நீர்நிலைகளும் உயிரினங்களைப் பாதுகாக்கின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கின்றன என்ற விழிப்புணர்வு நமது ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்க வேண்டும்.
 இந்தியா 1950-லிருந்தே வனப் பதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறது. தொன்றுதொட்டு இந்திய கலாசாரத்தில் இயற்கை, நதிகள், தாவரவகைகள், மரங்கள் வழிபாடு மக்கள் வாழ்க்கையோடு ஒன்றியுள்ளது. ஸ்ரீராமர் சீதையோடும் லஷ்மணனோடும் வன வாசம் இருந்தது காடுகளின் புனிதத் தன்மையை மக்களுக்கு உணர்த்தியது. 
 இந்தியாவின் வன செயல்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் வனங்களின் பரப்பளவும், மரங்களின் அடர்த்தியும் மொத்த நிலப்பரப்பில் 33% அடைய வேண்டும் என்பதுதான். உலகில் 31% நிலப்பரப்பில் காடுகள் அடர்ந்துள்ளன. ஆனால், இந்தியாவில் காடுகளின் பரப்பளவு 21.34% தான். ஆர்க்டிக் குளிர்ப் பிரதேசம், ரஷியா, சீனா, அமெரிக்கா நாடுகளில் காடுகள் அதிகம். அமேசான் காடு ஒன்றே பல்லாயிரக்கணக்கான ஜீவ ராசிகளை உள்ளடக்கியது.
 மக்கள்தொகை பெருக்கத்தால் பல நாடுகளில் வனங்களின் அளவு சுருங்கும் நிலை உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்தாலும், காடுகளின் அடர்த்தி சுருங்கவில்லை என்பது ஓரளவு ஆறுதலான செய்தி. அதற்கு முக்கியக் காரணம் 100% வனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளன. 
 தமிழகத்தைப் பொறுத்தவரை காடுகளின் பரப்பளவு 30,850 சதுர கிலோ மீட்டர். இது மொத்த நிலப் பரப்பில் 23.72%. காப்புக் காடுகள் (ரிசர்வ்டு ஃபாரஸ்ட்) மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வனவிலங்கு பூங்காக்கள், பறவை சரணாலயம், தாவர வகை பூங்காக்கள், கடல்சார் வனங்கள் வன இலாகாவால் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. 
 கடந்த மூன்று ஆண்டுகளில் 2015 வரை வனப் பரப்பை கணக்கெடுக்கையில் சுமார் 2,501 சதுர கி.மீ. உயர்ந்திருக்கிறது. இது நாட்டிலேயே அதிகமான வளர்ச்சி என்பது தமிழ்நாட்டுக்குப் பெருமை.
 ஒரு மரம் வெட்ட நேர்ந்தால் 10 மரங்கள் நட வேண்டும் என்பது விதி. ஆனால், அது நடப்பதில்லை. சென்னையிலேயே எவ்வளவோ பசுமை சின்னங்களாக இலவு, தான்றி, நீர் மருது, நீர் கடம்பை, மகிழம், அழிஞ்சி புன்னை, வேங்கை, ஆலமரம், நாவல் போன்ற வானோங்கிய மரங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் இரக்கமின்றி ஆணி அடித்து விளம்பரப் பலகை வைக்கிறார்கள். மரங்கள் விரைவில் ஏன் பட்டுப்போகாது? ராவணனால் சிறை வைக்கப்பட்ட சீதைக்கு நிழல் கொடுத்த புனித அசோக மரம் அழிந்து வரும் மரப்பட்டியலில் உள்ளது. 
 பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் வனத் துறையோடு மரம் நடுவதிலும் வளர்ப்பதிலும் பங்கு கொள்கின்றன. காடுகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் உள்ள மரங்களின் அடர்த்தி ட்ரீ கவர் 3.46% தான். அதாவது, 4,505 சதுர கி.மீ. மரங்களின் அடர்த்தி இப்போதுள்ள மூன்றரை சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயரவேண்டும். இது தொடர்ந்து நடைபெறவேண்டும்.
 பெருவாரியாக மாணவர்களையும் இளைஞர்களையும் ஈடுபடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, அரசியல் சாசனத்தில் 51ஏ உறுப்பில் ஒவ்வொறு இந்தியனும் ஆற்ற வேண்டிய கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளதை நாம் உணரவேண்டும்.
 இதனை மனதில் கொண்டு 2011-இலிருந்து இதுவரை 262 லட்சம் மரக் கன்றுகளை வனத்துறை நட்டுள்ளது. அது தவிர, வனங்கள் பசுமைத் திட்டம் ஏழாண்டு தொடர் திட்டமாக 2012-ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை அமலில் இருக்கும். இதற்கு 686 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 அரசின் தொலைநோக்குத் திட்டம் விஷன் 2023-இல் சுற்றுப்புறச் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள், வனப்பகுதிகளை அதிகப்படுத்துதல், நீர்நிலை பாதுகாப்பு, நிலத்தடி நீரைச் சேமித்து அதன் நிலை உயரச்செய்தல், கடலோரப் பகுதி பாதுகாப்பு, பலவகை உயிரினப் பாதுகாப்பு, இயற்கை வளங்கள், நிலப்பரப்பு, அதில் உள்ள மண் வளங்கள் பாதுகாத்தல் இதில் அடங்கும்.
 வனப் பாதுகாப்பில் வனத் துறைக்கு மட்டுமல்ல, காவல் துறைக்கும் பொறுப்பு இருக்கிறது. பர்கூர், சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் வீரப்பன் கூட்டாளிகளின் அக்கிரமங்கள் 1980-லிருந்து 20 ஆண்டுகள் தொடர்ந்த போதுதான் அவர்களின் அட்டகாசத்தை அடக்கவும் வனங்களைப் பாதுகாக்கவும் சிறப்பு அதிரடிப்படை, எஸ்.டி.எஃப். உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டு வீரப்பன் கதை முடிக்கப்பட்ட பிறகு, சிறப்புப் படை தொடர்ந்து வனப்பகுதியை வன இலாக்காவோடு இணைந்து பாதுகாத்து வருகிறது.
 வனப்பகுதிகள் நக்ஸலைட்டுகள், பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆவதைத் தடுக்கவேண்டிய பொறுப்பும் சிறப்பு காவல் படைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
 வட மாநிலங்களில் உள்ள காடுகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்க, மத்திய அரசு வனவிலங்குகளை வேட்டையாடும் கொடூரர்களைக் கட்டுக்குள் கொண்டுவர சிறப்பு புலனாய்வு பிரிவு ஒன்றினை உருவாக்கியுள்ளது. வனங்களை அழியாமல் பாதுகாத்தால் தான் அவை வனவிலங்குகள் சுதந்திரமாக ஜீவிக்க அடைக்கலம் அளிக்கும்.
 வனவிலங்கு வேட்டையாடலில் சர்வதேச குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர் என்பதையும் சர்வதேச காவல்துறையுடன் (இண்டர்போல்) இணைந்து செயல்பட வேண்டும் என்ற முன்னாள் டி.ஜி.பி. சுப்ரமணியன் தலைமையிலான குழு அறிக்கையின் படி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 
 2030-ஆம் ஆண்டிற்குள் தொய்வில்லாது பரிமளிக்கும் வளர்ச்சியை உலகில் எல்லா நாடுகளும் அடைய வேண்டும் என்ற நோக்கத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. அதற்கு உலக நாடுகள் எடுக்கவேண்டிய முயற்சிகளின் அடித்தளம் வனம், நீர்நிலை பாதுகாப்பு. 
 அப்துல் கலாம் வலியுறுத்தியது போல ஒவ்வொருவரும் பத்து மரங்கள் பேணினால் தமிழகத்திலே 70 கோடிக்கும் மேல் மரங்கள் செழிக்குமே! சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணமிது.
 

source : Dinamani

No comments:

Post a Comment