Wednesday, December 30, 2015

கோவையில் இயற்கை முறை வேளாண் பயிற்சி பட்டறை தஞ்சையிலிருந்து 50 பேர் உள்பட1,500 விவசாயிகள் பங்கேற்பு

இயற்கையான முறையில் செலவில்லாமல் விவசாயம் செய்வது பற்றி  கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற 8 நாள் பயிற்சிப் பட்டறையில் தஞ்சை மாவட்டத்தில் 50 பேர் உள்பட தமிழகத்திலிருந்து 1,500 இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிர்களுக்கு யூரியா, பொட்டாஷ், டிஏபி உள்ளிட்ட ரசாயன உரங்களை வைப்பதால் மண் மலடாகி விடுவதுடன் மக்களுக்கு சர்க்கரை நோய், இருதய அடைப்புகள், மூட்டுவலி, சரும நோய், புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டு அவதியுற்று உணவே விஷமாகும் சூழ்நிலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளிடையே தற்போது விழிப்புணர்வு காரணமாக ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை விவசாயத்திற்கு பெரும்பாலான விவசாயிகள் மாறி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் தமிழ்நாட்டை சேர்ந்த 1,500 இயற்கை விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி மற்றும் ஒரு பைசா செலவில்லாத இயற்கை உரம் தயாரிப்பு குறித்து 8 நாள் பயிற்சி அளித்துள்ளார். இதில் கும்பகோணம் அடுத்த ஏராகரம் கிராமத்திலிருந்து இயற்கை விவசாயிகள் சுவாமிநாதன், சவுந்தரராஜன், செல்வராஜ், உதயகுமார், தங்கையன் உள்பட தஞ்சை  மாவட்டத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர்.  பயிற்சி பெற்ற சுவாமிநாதன் கூறுகையில், நான் பல ஆண்டுகளாக 15 ஏக்கர் பரப்பில் நெல் மற்றும் கரும்பு விவசாயம் செய்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரசாயன உரங்களை இட்டு  பயிர் செய்தேன். ரசாயன உரங்களின் விலை அதிகம். பூச்சி தாக்குதல், மக்களை தாக்கும் மர்ம நோய்கள், சாகுபடி செய்யும் மண்ணே மலடாகி விடுகிறது. இதனால் ஏராளமான மக்கள் நோயினால் அவதிக்குள்ளாகி வருவது அறிந்து மனம் வெதும்பி பிறகு கடந்த 5 வருடமாக ரசாயன உரங்களை முழுவதுமாக விட்டு விட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். முன்பெல்லாமல் நெல்லுக்கு இயற்கை உரமான பஞ்சகவ்யம், அமிர்த கரைசல் பயிர்களுக்கு தெளித்தேன். இதனால் நெல் பயிர்கள் நன்றாக செழிப்புடன் அதிக மகசூல் கிடைத்தது. இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் நாட்டுக்கு விஷமற்ற உணவு பொருளை வழங்க முடிகிறது. மேலும் இதற்கு அடுத்த கட்டமாக தற்போது கடந்த வாரத்தில் பல்லடத்தில் நடைபெற்ற சுபாஷ்பலேக்கரின் செலவில்லா இயற்கை விவசாய பயிற்சி முகாமில் எங்களுக்கு நுண்ணுயிர் உற்பத்தியாகும் செலவில்லா உரக்கரைசலை தயாரிக்க பயிற்சியளித்தனர். இந்த பயிற்சியில் நெல்லுக்கு, நாட்டு பசுவின் சாணம் 1 கிலோ, ஹோமியம் 10 லிட்டர், உளுந்து மாவு 1 கிலோ, நாட்டு சர்க்கரை 1 கிலோ, வரப்பு மண் 1 கைப்பிடி இத்துடன் 200 லிட்டர் தண்ணீல் கலந்து கடிகார சுற்றில் ஒரு நாளைக்கு 2 தடவை 1 நிமிடம் வீதம் கலக்க வேண்டும். இதனால் ஏக்கருக்கு மகசூல் சுமார் 35 மூட்டைகளுக்கு மேல் கிடைக்கும். ஆனால் இதற்கான செலவு விவசாயிகளுக்கு ஒரு பைசா கூட செலவில்லாமல், இந்த கரைசலில் கலக்கப்படும் பொருட்கள் அனைத்தும் நமக்கு வீட்டில் அருகில் கிடைக்கும் செலவில்லாத பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுவே ரசாயன உரங்களை பயன்படுத்தி இருந்தால் ஒரு விவசாயி ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன் அதற்கான மகசூலை விவசாயிகள் எதிர்பார்க்க முடியாது. அத்துடன் சுற்றுப்புற சூழல் சீர்கேடு, விஷமுள்ள உணவுகளை உண்பதால் மக்களுக்கு கொடிய நோய்கள் ஏற்படும். இந்த செலவில்லா இயற்கை உரத்தை தயாரிக்கும்  முறையை அரசே ஏற்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்டம், கிராமங்கள் தோறும் இதுபோன்ற முகாம்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி அரசே நடத்த வேண்டும். அதனை முன்னிட்டு இந்த இயற்கை முறையில் செலவில்லா இயற்கை விவசாயத்தை விவசாயிகள் அனைவரும் கடைபிடித்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment