Friday, December 25, 2015

மானியத்தில் வேளாண் கருவி: ரூ.1.27 கோடி நிதி ஒதுக்கீடு


தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்திற்காக மாவட்டத்திற்கு ரூ.1.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக 2015-16ஆம் நிதியாண்டில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் வேளாண்மை இயந்திரமயமாக்கலுக்கான சார் இயக்கத்தின் கீழ் ரூ.1.27 கோடி கடலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல் நடவு இயந்திரம், பல்வகை தானியங்கள் கதிரடிக்கும் கருவி, நேரடி விதைப்புக் கருவி, புல்வெட்டும் கருவி, தேங்காய் மட்டை உரிக்கும் கருவி, மணிலா காய் பிரித்தெடுக்கும் கருவி போன்றவை மானியத்தில் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் பொதுப் பிரிவினரிடமிருந்து வரவேற்கப்படுகிறது.
 இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள கடலூர் மாவட்ட விவசாயப் பெருமக்கள், தங்களது வட்டத்துக்குள்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் அடையலாம்.
கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டம் விவசாயிகள் கடலூர்- பாண்டி சாலையில் சின்னகங்கணாங்குப்பத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டம் பகுதி விவசாயிகள் சிதம்பரம் பள்ளிப்படையிலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி வட்ட விவசாயிகள் விருத்தாசலம் பூதாமூரிலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment