Monday, June 13, 2016

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சி. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழக முதல்வர் அறிவித்துள்ள குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் விலையில்லா இயந்திர நடவு செய்வதற்கான தொகையை ஏக்கருக்கு ரூ. 4,000 வீதம் தங்களுடைய வங்கிக் கணக்கில் பெறலாம். இதற்கு தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரிடம் நடவு செய்த ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் விவசாயி வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இயந்திர நடவு செய்ததற்கான உண்மைப் பட்டியல், சிட்டா அடங்கல், நடவு செய்த வயல்களில் விவசாயியுடன் எடுத்த புகைப்படம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் இடுபொருள்களான நெல் நுண்ணூட்டக் கலவை ஏக்கருக்கு 5 கிலோ வீதமும், சிங் சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ வீதமும் 100% மானியத்தில் பெற தனித் தனியாக விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.
பாசன நீரை வயலுக்கு எடுத்துச் செல்ல (எச்.டி.பி.இ.) 90 மி.மி. விட்டமும், 20 அடி நீளமும் உள்ள குழாய்கள் கடந்த ஆண்டுகளில் வழங்கப்படாத விவசாய குடும்பத்துக்கு 100% மானியத்தில் வழங்கப்படுகிறது.
காவிரி துணை ஆறு மற்றும் கல்லணைக் கால்வாய் பகுதிகளில் குறுவை சாகுபடி செய்ய இயலாத விவசாயிகளுக்குப் பயறு வகை சாகுபடி செய்ய உழவு மற்றும் விதைப்பு மானியமாக ஏக்கருக்கு ரூ. 1,400 வீதம் பெறலாம். இதற்கான விண்ணப்பத்துடன் விவசாயி வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், உழவு செய்ததற்கான உண்மைப் பட்டியல், சிட்டா அடங்கல், உழவு மேற்கொண்டதற்கான விவசாயியுடன் வயலில் எடுத்த புகைப்படம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
இந்தத் திட்டங்களில் பயன்பெற தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது வேளாண்மை அலுவலர் அல்லது துணை வேளாண்மை அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலரை அணுக வேண்டும்.
மேலும் விவரங்களுக்கும், சந்தேகங்களுக்கும் தஞ்சாவூர் மாவட்ட குறுவை தொகுப்பு திட்டக் கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மைத் துறை துணை இயக்குநருமான ந. இளஞ்செழியனை 97509 69416 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Source : dinamani

No comments:

Post a Comment