ஈரோடு மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக மண் வள ஆண்டையொட்டி, தேசிய அளவில் தரிசு நிலங்களின் தன்மையை ஆய்வு செய்யவும், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் வேளாண் துறை மூலமாக மண் வள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 375 வருவாய் கிராமங்களில் இருந்து 1 லட்சம் விவசாயிகளுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் இருந்து மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் இதுவரை 65,041 விவசாயிகளுக்கு மண் வள அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேளாண் உதவி இயக்குநர் சாவித்திரி, சிறப்பு வேளாண் அலுவலர் ஜெயமணி, வேளாண் அலுவலர் சுமையா ஆகியோர் கூறியதாவது:
மானாவாரி, ஆயக்கட்டு மற்றும் தரிசு நிலங்களில் மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்வதன் மூலமாக மண்ணின் வளம் குறித்த தகவல்களைச் சேகரிக்க மத்திய வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் விவசாயிகளுக்குச் சொந்தமான நிலத்தின் மண்ணை எடுத்து அதில் உள்ள மண் நயம், கார, அமில நிலை, சுண்ணாம்பு நிலை, மண்ணில் உள்ள அங்கக சத்துகள், கால்சியம், மெக்னீஷியம், சோடியம், கந்தகம் போன்றவற்றின் அளவுகள் குறித்து அறிந்து மண் வள அட்டை வழங்கப்படும். மண்ணில் உள்ள சத்துகளின் அடிப்படையில் அது களர் நிலமா, விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமா என்பதையும் விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்கிறோம்.
இதன் மூலமாக அந்த நிலத்தில் என்னென்ன பயிர்களை சாகுபடி செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள இயலும். அந்த வகையில் இதுவரை மாவட்டம் முழுவதும் 65,041 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 2017-க்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்படும். மானாவாரி, தரிசு நிலங்கள் மட்டுமின்றி ஆயக்கட்டு பாசன நிலங்களிலும் எடுக்கப்பட்ட மண் மாதிரி ஆய்வுகள் மூலமாக குறைந்த உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
தனியே மண் மாதிரி பரிசோதனை செய்தால் குறைந்தபட்சம் ரூ. 250 செலவாகும். ஆனால், இலவசமாக நாங்கள் மண் மாதிரி பரிசோதனை செய்து தருவதன் மூலமாக நிலங்களில் தேவையில்லாமல் கூடுதல் உரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும் என்றனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment