Wednesday, June 22, 2016

நெல் சாகுபடியில் விதை நேர்த்தி



நெல் சாகுபடியில் விதை நேர்த்தி செய்து அதிக மகசூல் பெறலாம். இதுபற்றிய தொழில்நுட்பங்கள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் இராஜா.ரமேஷ், ரெ.பாஸ்கரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விதை நேர்த்தியென்பது விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்கவும், பயிர்களை நோய் மற்றும் பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கவும் விதைக்கும் முன்பு விதைகளை ரசாயன பூஞ்சாண மற்றும் பூச்சிக்கொல்லிகள் அல்லது எதிர் உயிர் பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டு உயிர் உரங்களுடன் மேல் பூச்சு செய்வதே ஆகும்.
விதை நேர்த்தி செய்வதால் உண்டாகும் பயன்கள்: விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கின்றது.
விதை மற்றும் மண் மூலம் பரவும் பூஞ்சாண நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
பயிர்களின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது.
பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கிறது.
விதை நேர்த்தியில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்கள் மண்ணிலுள்ள கனிமப் பொருள்களைப் பயன்படுத்தி பல மடங்காகப் பெருகி செடிகளுக்கு நீண்ட காலப் பாதுகாப்பை தருகிறது.
உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்றவை பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்தையும், பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிட்டாத நிலையில் உள்ள மணிச்சத்தையும் கிரகித்து பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் உதவி செய்கின்றன.
தரமான நெல் விதைகளைத் தேர்வு செய்யும் முறை: விதைகளின் முளைப்புத் திறனானது 80 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். அதற்கு சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வயலில் அறுவடை செய்து விதைகளாகப் பயன்படுத்தும்போது, விதைகளை 1.2 சத உப்பு நீரில் (3 கிலோ கல் உப்பை 18 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்) இட்டு உப்புக் கரைசலில் மிதக்கும் எடை குறைந்த தரமற்ற விதைகளை நீக்கிவிட்டு மூழ்கிய விதைகளை மட்டுமே நன்கு கழுவி விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.
ரசாயனக்கொல்லி விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பென்டாசிம் என்ற பூஞ்சாணக்கொல்லி மருந்தைக் கலந்து 24 மணி நேரம் வைக்கவும். பின்பு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் ஏக்கருக்குத் தேவையான விதைக்கு 200 கிராம் (ஒரு பொட்டலம்) மற்றும் பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் (ஒரு பொட்டலம்) ஆகியவற்றை 500 மி.லி. ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதைகளோடு கலக்கி நிழலில் உலர்த்தி பின்பு விதைப்பதற்கு பயன்படுத்தவும்.
உயிர் எதிர்க்கொல்லி விதை நேர்த்தி: உயிர் எதிர் பூசணக் கொல்லியான சூடோமோனஸ் புளுரோசன்ஸ் பாக்டீரியாவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து விதைகளை இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதை மறுநாள் காலையில் வடிகட்டி, விதைகளை ஈர சாக்கிலிட்டு நிழலில் உலர்த்தி பின்பு இருட்டு அறையில் வைத்திருந்து 3 முதல் 5 மி.மீ. வரை முளை கட்டவேண்டும்.
விதைப்பதற்கு முன்பு முளைக் கட்டிய விதைகளை ஒரு பாக்கெட் (200 கிராம்) அசோஸ்பைரில்லம், ஒரு பாக்கெட் (200 கிராம்) பாஸ்போ பாக்டீரியம் உயிர் உரத்துடன் நன்கு கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
நாற்றின் வேர்களை நனைத்தல்: ஒரு கிலோ சூடோமோனஸ் பாக்டீரியா கலவையை 10 சதுர மீட்டர் நாற்றங்காலில்
உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஓர் ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளின் வேர்களைக் குறைந்தது அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு நடவு செய்ய வேண்டும். நீண்ட நேரம் ஊறவைப்பதால் அதன் செயல்திறன் கூடுகிறது.
சூடோமோனாஸ் என்ற எதிர் உயிர் பாக்டீரியா மண்ணின் மூலம் பரவும் நோய்கள், இலை மற்றும் தண்ணீர் மூலம் பரவும் பூஞ்சாண நோய்களான குலைநோய், இலையுறை கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் சூடோமோனாஸ் ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுவதால் பயிர்கள் செழித்து திரட்சியுடன் வளர்ந்து மகசூல் அதிகரிக்கின்றது. இத்துடன் பயிர்களில் எதிர்ப்புத் திறனைக் கூட்டி பூச்சித்தாக்குதலையும் ஓரளவு குறைக்கும்.
விதை நேர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: ரசாயன பூஞ்சாண மற்றும் பூச்சிக்கொல்லிகளால் விதைநேர்த்தி செய்தால் குறைந்தது 24 மணி நேரம் இடைவெளி விட்டு பின்பு தான் உயிர் உர விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் ரசாயன பூஞ்சாண மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை உயிர் உரங்களுடன் கலக்கக் கூடாது. விதைகளை நிழலில் மட்டுமே உலர்த்த வேண்டும்.
இத்தகைய மிக சிக்கனமான, எளிய தொழில்நுட்பமான விதை நேர்த்தி முறைகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக பூச்சி மற்றும் நோய்களை வரும்முன் தடுத்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம். ஏனெனில் நல்ல விதையும், விதை நேர்த்தியும் மட்டுமே 10 முதல் 20 சதம் வரை மகசூலை அதிகரிக்கச் செய்கின்றன.
Source : Dinamani

No comments:

Post a Comment