Tuesday, June 21, 2016

திண்டுக்கல்லில் நாவல் தேன்




திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரம் மெட்டூரில் 15 ஏக்கரில் ஜே.கே.பார்ம் என்ற பெயரில் நாவல் தோட்டம் உள்ளது. இங்கு 112 பெரிய நாட்டு நாவல் மரங்கள் உள்ளன. பிப்ரவரி மாதத்தில் பூப்பூக்கும். தற்போது நாவல் சீசன் துவங்கியுள்ளது.
ஒரு மரத்தில் 65 கிலோ பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாவல் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியது. நன்மை செய்யும் கொழுப்பு சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தது. ஜீரண சக்தியை அதிகரிக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது. விலை ஒரு கிலோ ரூ.170.
நாவல் மரங்களுக்கு நடுவே 20 தேன் கூடுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் வளர்க்கப்படும் இத்தாலியன் தேனீக்கள், நாவல் மரத்தில் உள்ள பூக்களில் மட்டுமே தேன் எடுக்கும் வகையில் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பெட்டியில் சேருவதை நாவல் தேன் என கூறுகின்றனர். இந்த தேன் கட்டியாகவும், நாவல் சுவை கலந்த துவர்ப்பு தன்மையுடனும் இருக்கிறது.

உரிமையாளர் சி. ஜெயக்குமார் கூறியதாவது: நாவல் பழங்களை பசுமை அங்காடிகளில் விற்பனை செய்கிறோம். நாவல் ஜூஸ் 700 மில்லி ரூ.250. நாவல் பவுடர் 100 கிராம் ரூ.40, நாவல் தேன் கிலோ ரூ.650க்கு விற்கிறோம். ஒரு பெட்டியில் 4 கிலோ முதல் 6 கிலோ வரை தேன் எடுக்கிறோம். முதல் முறையாக நாவல் தேன் விற்கிறோம். நாவல் மரத்திற்கு இயற்கை உரங்கள் மட்டுமே இடுகிறோம், என்றார். இவரை 96980 06954ல் தொடர்பு கொள்ளலாம்.

உலர் நாவல் பழம் உற்பத்தி: இந்த பண்ணையில் நாவல் பழம் ஜனவரியில் இருந்து ஜூலை வரை காய்க்கும் வகையில் இரண்டு விதமாக பிரித்து சாகுபடி செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நேரங்களில் பழங்களை பதப்படுத்தி, உலர் பழம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக மரத்திலேயே நாவல் பழம் உலர விடப்படுகிறது. பின்பு 'சோலார் சுடுகலன்' மூலம் பதப்படுத்தப்பட்டு, 6 மாதம் கெடாத வகையில் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு கிலோ ரூ.1,500 வரை விற்கப்படுகிறது.

-எஸ்.அரியநாயகம், திண்டுக்கல்

Source : Dinamalar

No comments:

Post a Comment