குமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக பெய்துவரும் கனமழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. மாம்பழத்துறையாறு அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. சானல்களிலும், ஆறுகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வாய்க்கால்கள் நிரம்பி வருகின்றன.
செவ்வாய்க்கிழமை மழை குறைந்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்தும் குறையத் தொடங்கியுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 38.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 821 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 582 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 158 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் 13 அடியை எட்டியுள்ளது. அணைகளின் நீர்மட்டம் அதிகமாக உள்ளதையடுத்து குழித்துறை ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணைகள் நிரம்பி வருவதையடுத்து அணைகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணையில் நீர் வரத்திற்கேற்ப அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குமரி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பறக்கை, சுசீந்திரம், தெங்கம்புதூர், பூதப்பாண்டி, இறச்சகுளம், தாழக்குடி பகுதிகளில் இதுவரை 1,500 ஹெக்டேரில் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
நிகழாண்டு மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி மேற்கொள்ள வேளாண்மைத் துறை அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். அணையில் நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும், மேலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாலும் கன்னிப்பூ சாகுபடியில் இலக்கை எட்டமுடியும் என்று வேளாண்மைத் துறை அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Source : dinamani
No comments:
Post a Comment