Saturday, May 21, 2016

மலர் கண்காட்சி அழைப்பிதழ் அச்சிட காத்திருக்கும் தோட்டக்கலைத்துறை

மலர் கண்காட்சிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரே அமைச்சர்கள் பட்டியல் வெளியாகும் என்பதால், அழைப்பிதலை அச்சடிப்பதற்கு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.ஆண்டுதோறும் மே மாதம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 

இதனை காண வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மலர் கண்காட்சியை ஆண்டு தோறும் தமிழக அரசின் வேளாண்மைத்துறை அமைச்சரோ அல்லது வேறு அமைச்சர்களோ துவக்கிவைப்பது வழக்கம். இல்லையேல், தமிழக கவர்னர் துவக்கி வைப்பது வழக்கம். அதேபோல், பழக்கண்காட்சியின் துவக்க விழாவிற்கு தமிழக அமைச்சர்களில் யாரவது ஒருவர் அல்லது எம்எல்ஏ.,க்கள் கலந்துக் கொள்வது வழக்கம். 

ஆனால், இம்முறை சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆனா நிலையில், புதிய அரசு பதவி ஏற்ற பிறகே யார் அமைச்சர், எந்த துறைக்கு யார் யார் அமைச்சர்கள் என்பது தெரிய வரும். இந்நிலையில், கோடையில் ஊட்டியில் நடக்கும் முக்கிய விழாவான, மலர் கண்காட்சி வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கி 29ம் தேதி வரை ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மூன்று நாட்கள் நடக்கிறது. 

மலர் கண்காட்சிக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், மலர் கண்காட்சிக்கான அழைப்பிதழ் அச்சிட தோட்டக்கலைத்துறை தயாராகி வருகிறது. ஆனால், புதிதாக பெறுப்பு ஏற்க உள்ள அரசில் யார் வேளாண்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்கள்  என்ற தகவல்கள் வெளியாகாத நிலையில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், குழப்பத்தில் உள்ளனர். மேலும், அழைப்பிதழுக்கான அனைத்து பணிகளும் முடித்த நிலையில், அமைச்சரின் பெயரை அச்சிடுவதற்காக காத்திருக்கின்றனர். அ.தி.மு.க., அமைச்சர்கள் பட்டியல் வெளியானவுன் உடனுக்குடன் அச்சிடும் பணிகள் துவக்கவும் தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.

மேலும், வரும் 23ம் தேதி ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அன்றைய தினம் யார், யார் அமைச்சர்கள் என்ற பட்டியல் வெளியாகும். அன்றைய தினமே அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு மறு நாள் முதல் வழங்கவும் தோட்டக்கலைத்துறை தயாராகியுள்ளது. ஆனால், இன்று துவங்கும் பழக்கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சங்கரே துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Source : Dinakaran

No comments:

Post a Comment