Saturday, May 21, 2016

தருவைக்குளத்தில் 27இல் மீன் தீவனத் தயாரிப்பு பயிற்சி


தூத்துக்குடி தருவைக்குளத்தில் உள்ள கடற்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு இம்மாதம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
 இதுகுறித்து அந்த அலுவலகச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அங்கமாக விளங்கும் தூத்துக்குடி மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் தூத்துக்குடி தருவைக்குளத்தில் கடற்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறை இயங்கி வருகிறது. இந்த மையத்தில் மே 27 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரிப்பது குறித்து இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
 இந்தப் பயிற்சியில் மீனுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள், மீன் உணவு தயாரிக்க தேவையான தாவர மற்றும் விலங்கின மூலப்பொருள்களைத் தேர்ந்தெடுத்தல், தேர்ந்தெடுத்த மூலப்பொருள்களை நன்றாக அரைத்தல், மீன் உணவு பிழிந்தெடுக்க பயன்படும் கருவிகள், மிதவை மற்றும் மூழ்கும் மீன் உணவு தயாரித்தல், காய வைத்தல், மீன் உணவின் தரக்கட்டுப்பாடு, உற்பத்தி செலவின கணக்கீடு குறித்த தொழில்நுட்ப வகுப்பு மற்றும் செயல்விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதில் பங்கேற்க விரும்பும் தொழில் முனைவோர் உள்ளிட்டோர் மே 26 ஆம் தேதி மாலை 5  மணிக்குள்  0461- 2277424, 2340554 ஆகிய தொலைபேசி எண்களிலோ, 94422 88850 என்ற செல்லிடைப்பேசி எண்ணிலோ தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம். மேலும், பேராசிரியர் மற்றும் தலைவர், கடற்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தருவைக்குளம், தூத்துக்குடி  628 105 என்ற முகவரியிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dinamani

No comments:

Post a Comment