Thursday, May 19, 2016

தேயிலை ஏலத்தில் ரூ.11 கோடி கூடுதல் வருவாய்


குன்னுார் தேயிலை ஏல மையத் தில், கடந்த நான்கு மாதங்களில், 11 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது.
நீலகிரியில், உற்பத்தியாகும் தேயிலை துாள், குன்னுாரில் உள்ள ஏல மையங்களில் விற்பனை, செய்யப்பட்டு வருகிறது. வாரந்தோறும் நடக்கும் இந்த ஏலத்தில், தேசிய அளவில் பல பகுதிகளில் இருந்தும், வர்த்தகர்கள் பங்கேற்று ஏலம் எடுக்கின்றனர். இந்த ஆண்டில் இதுவரை, 17 ஏலங்கள் முடிந்துள்ளன.
இது குறித்து, சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் சுந்தர் கூறியதாவது:
நடப்பாண்டு ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான ஏலங்களில், சராசரி விலையாக, ஒரு கிலோவுக்கு, 97.44 ரூபாய் கிடைத்தது. கடந்த ஆண்டு இதே மாதங்களில், 73.84 ரூபாய் விலை இருந்தது.
இதனை ஒப்பிடும் போது, தற்போதைய விற்பனையில், ஒரு கிலோவுக்க, கூடுதலாக, 20 ரூபாய் கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் மொத்த விற்பனை, 1.45 கோடி கிலோ இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 1.67 கோடி கிலோ விற்பனையாகியுள்ளது. எனினும், நடப்பாண்டில் ஏற்பட்ட விலை ஏற்றம் காரணமாக, 141.29 கோடி ரூபாய் அளவுக்கு தேயிலை துாள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், தேயிலையின் விற்பனை, 129.98 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த நான்கு மாதங்களில் மட்டும், 11.31 கோடி ரூபாய் அதிக வருமானம் கிடைத்துள்ளது. இது 8.70 சதவீத வளர்ச்சியாகும். இந்த நிலை நீடித்தால் மட்டுமே, தேயிலை ஏலத்திலும், உற்பத்தியிலும் நல்ல எதிர்காலம் இருக்கும்.
தற்போதுள்ள நிலவரம் தொடருமானால், இந்த ஆண்டின் இறுதியில், கடந்த ஆண்டைவிட, 30 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு சுந்தர் கூறினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment