Thursday, January 21, 2016

இறவை நிலக்கடலையில் கூடுதல் மகசூலுக்கு ஊட்டச்சத்து கரைசல் தெளிக்க வேண்டும் வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்

அன்னவாசல், :  புதுகை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இறவை நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற ஊட்டச்சத்துக் கரைசல் இருமுறை தெளிக்க வேண்டுமென வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.   புதுகை வேளாண் இணை இயக்குநர் சந்திரசேகரன், குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் சாந்தி மற்றும் வேளாண் அலுவலர் செல்வி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
  புதுகை மாவட்டத்தில் தற்போது இறவை நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுப் பூக்கும் தருணத்தில் உள்ளது. பூக்கும் சமயத்தின்போது பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும் பூக்கள் மிகுதியாகப் பூக்கவும் ஊட்டச்சத்துக் கரைசல் இலைவழியாகத் தெளிப்பது சிறந்ததாகும். ஊட்டச்சத்து கரைசல் தயார் செய்தல்:  ஏக்கர் ஒன்றுக்குத் தேவையான ஒரு கிலோ டிஏபி 400 கிராம் அம்மோனியம் சல்பேட், 200 கிராம் போராக்ஸ் ஆகிய 3 உரங்களையும், தெளிப்பதற்கு முதல் நாள் இரவே ஏறத்தாழ 15 லிட்டர் நீரில் ஊறவைத்தல் வேண்டும். இக்கரைசலை அவ்வப்போது நன்கு கலக்கிவிடுதல் வேண்டும். மறுநாள் காலை இக்கரைசலை வடிகட்டி கிடைக்கும் தெளிந்த கரைசலை மட்டும் (ஏறத்தாழ 13 லி.) எடுத்து அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து 200 லிட்டர் கரைசலாகத் தயார் செய்தல் வேண்டும். இக்கரைசலைக் கைத்தெளிப்பான் மூலம் விதைத்த 25ம் நாள் ஒரு முறையும் பின்பு 10 நாட்கள் கழித்து 35ம் நாள் ஒரு முறையும் என இருமுறை இலைகள் நன்கு நனையுமாறு தெளித்தல் வேண்டும். இக்கரைசலுடன் பிளானோபிக்ஸ் எனும் பயிர் வளர்ச்சி ஊக்கியை ஏக்கர் ஒன்றுக்கு 140 மி.லி. எனும் அளவில் கலந்தும் தெளிக்கலாம்.
ஊட்டச்சத்து கரைசலின் பயன்கள்:  ஊட்டச்சத்து கரைசலை நிலக்கடலைக்குத் தெளிப்பதால் பூக்கள் உதிர்வது தடுக்கப்படுகிறது. பூக்கள் மிகுதியாகப் பூப்பதற்கு உதவுகிறது. நன்கு திரட்சியான பொக்கற்ற காய்கள் நிறைய பிடித்து நல்ல மகசூல் கிடைக்கிறது. பயிர் நன்கு வளர்ச்சி பெற்று பூச்சி, நோய்களை எதிர்க்கும் தன்மையைப் பெறுகிறது
உழவர்கள் கவனிக்க வேண்டியவை: பரிந்துரைக்கப்பட்ட அளவு உரங்களை மட்டும் கரைசலுக்கு பயன்படுத்துதல் வேண்டும். தேவைக்கு மேல் உரங்களை பயன்படுத்தும்போது செடிகள் பாதிக்க வாய்ப்புண்டு. ஊட்டச்சத்து கரைசலைத் தெளிக்கும்போது நிலத்தில் ஈரம் இருப்பது கட்டாயம். எனவே, இறவை நிலக்கடலைச் சாகுபடி செய்யும் உழவர்கள் ஊட்டச்சத்துக் கரைசலைத் தெளித்துக் கூடுதல் மகசூல் பெறலாம். இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.     

Source : Dinakaran

No comments:

Post a Comment