சேதுபாவாசத்திரம், : சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள உளுந்து பயிரில் 25 சதவீதம் கூடுதல் மகசூல் பெற டிஏபி கரைசல் தெளிப்பது அவசியம் என்று விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளண்மை உதவி இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிரில் 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெற 2 சதவீத டிஏபி கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும். ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டிஏபி உரத்தை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாளே ஊறவைத்து நன்கு கலக்கிவிட வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டி எடுத்து கொண்டு அத்துடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை வேளையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 35வது நாள் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 45வது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் ஒரு முறையும் கரைசல் தயாரித்து 2 முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணிலிருந்து நேரடியாக மணிச்சத்தை எடுத்து கொள்ள முடியாத பயிர்கள் டிஏபி கரைசல் மூலமாக இலை வழியாக மணிச்சத்து அளிக்கும்போது பயிர்கள் உடனடியாக மணிச்சத்தை பெறுவதுடன் உருவாகும் பூக்களை எல்லாம் பிஞ்சுகளாக மாறி காய்களாக உருவாகி அதில் உள்ள விதைகள் நல்ல திரட்சியான எடையுடன் கூடிய தரமான மணிகளாக கிடைக்கிறது. இதனால் வழக்கத்துக்கு மாறாக ஒரு ஏக்கரில் 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டிஏபி கரைசல் தெளித்து பயன்பெறலாம். மேலும் விவரங்கள் அறிய வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment