Sunday, January 31, 2016

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 50% விவசாயிகள்

"மத்திய அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 சதவீத விவசாயிகளை சேர்க்க வேண்டும்; இந்த இலக்கை 2 ஆண்டுகளில் அடைவதற்கு உறுதியேற்க வேண்டும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு அவர் "மனதின் குரல்' (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியின் மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரை:
நமது நாட்டில், விவசாயிகளின் பெயரில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுதொடர்பான விவாதத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், விவசாயிகள் முக்கியப் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இயற்கைப் பேரிடரின்போது, அவர்களின் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகி விடுகிறது. அவர்களின் ஓராண்டு உழைப்பும் வீணாகிறது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கருதியபோது, எனக்கு ஒன்றே ஒன்றுதான் நினைவுக்கு வந்தது. அதுவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டம்.
2016ஆம் ஆண்டில், விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்ற மிகப் பெரிய பரிசை மத்திய அரசு கொடுத்துள்ளது. அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம், அது புகழப்பட வேண்டும் என்றோ அல்லது பிரதமரை மக்கள் வரவேற்க வேண்டும் என்பதற்கோ அல்ல.
பயிர்க் காப்பீடு தொடர்பாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அத்தகைய திட்டங்களால் நாட்டில் உள்ள 20 முதல் 25 சதவீத விவசாயிகள் கூட பயனடைந்தது கிடையாது. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தது 50 சதவீத விவசாயிகளை இணைப்போம் என்று நாம் உறுதி ஏற்போமா? இதற்கு உங்களின் உதவி எனக்குத் தேவை. ஏனெனில், இந்தத் திட்டத்தில் விவசாயி சேரும்பட்சத்தில், இயற்கைப் பேரிடரின்போது அவருக்கு பெரிய அளவில் உதவி கிடைக்கும்.
முன்பு போல அல்லாமல், இந்த முறை மத்திய அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு இந்த திட்டம் விரிவானதாகவும், எளிமை மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு கொண்டதாகவும் இருப்பதுவே காரணம் ஆகும். இந்த திட்டத்தின் சிறப்பு, இது மட்டுமல்ல. இதில் சேரும் விவசாயிகளுக்கு, அறுவடைக்குப் பிறகு 15 நாள்கள் கழித்து பயிர்களுக்கு எது நிகழ்ந்தாலும், அதற்கும் நிச்சயம் இழப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், இழப்பு குறித்த மதிப்பீடு, இழப்பீட்டுத் தொகை விநியோகம் ஆகிய பணிகள் விரைந்து முடிப்பது உறுதி செய்யப்படும்.
அதேபோன்று, காப்பீட்டுத் திட்டத்துக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர பிரீமியம் தொகையும் மிகவும் குறைவாகும். கரீப் பருவத்துக்கு 2 சதவீதமும், ரபி பருவத்துக்கு ஒன்றரை சதவீதமும் ப்ரீமியம் தொகை செலுத்தினால் போதும்.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்: நாடு முழுவதும் கடந்த 16ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட "ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம் இளைஞர்களுக்கு புதிய சக்தியை அளித்திருக்கிறது. முன்பு புதியன தொடக்கம் என்பது, தகவல் தொழில்நுட்ப துறையில்தான் சாத்தியம் என்ற தவறான புரிதல் இருந்தது. ஆனால் தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயம் உள்பட அனைத்துத் துறைகளிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பது தெளிவாகி விட்டது.
ஹரியாணாவில் மத்திய அரசால் தொடக்கி வைக்கப்பட்ட "பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' திட்டத்தால் சமூகத்தில் உண்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளைக் கொல்லும் சம்பவம் நடைபெற்ற அந்த மாநிலத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தற்போது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்றார் நரேந்திர மோடி.
சுமார் 30 நிமிட வானொலி உரையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், அழகுபடுத்துதல் குறித்தும், மறைந்த தலைவர்களின் சிலைகளை சுத்தமாகப் பராமரித்தல், அஸ்ஸôம் மாநிலம், குவாஹாட்டியில் விரைவில் நடைபெறவுள்ள தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி, 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்தும் பேசினார்.
தனது வானொலி உரையைக் கேட்க வேண்டுமெனில், 81908 81908 என்ற செல்லிடப் பேசி எண்ணுக்கு செல்லிடப் பேசியில் இருந்து "மிஸ்டு கால்' கொடுத்தால் கேட்கலாம் என்றார் மோடி.

வேமூலா விவகாரம் குறித்து பேசாததற்கு காங்கிரஸ் கண்டனம்

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித் வேமூலா குறித்து பிரதமர் மோடி பேசாததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியது:
தலித் மாணவர் தற்கொலை விவகாரத்தை முன்வைத்து, நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. ஆனால், அதுகுறித்து வானொலி உரையில் மோடி குறிப்பிடவேயில்லை.
இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா மீது பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம், கடந்த வானொலி உரையில் வேமூலா குறித்து அவர் ஒப்புக்குத்தான் அனுதாபம் தெரிவித்திருக்கிறார் என்பது தெரிகிறது என்றார் அவர்.

Source : Dinamani


No comments:

Post a Comment