கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2 ஆயிரம் ஹெக்டேரில், இயந்திர நெல் நடவு செய்யப்பட்டுள்ளதாக, வேளாண் இணை இயக்குனர் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், காவேரிப்பட்டணம் அடுத்த தேவீர அல்லி பகுதியில், நெல் நடவு செய்யும் முறைகளை, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சபா நடேசன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: இயந்திரத்தின் மூலம் நெல் நடவு செய்யும் போது, ஏக்கருக்கு, 2 ஆயிரம் வீதம் செலவு குறையும். நாற்று நடவு செய்ய ஆட்களை எதிர்பார்க்க தேவையில்லை. இரு தொழிலாளர்கள் இருந்தால் மட்டும் போதும். இயந்திரத்தின் மூலம் சரியான இடைவெளியில் நெல் நடவு செய்வதால், பூச்சி தாக்குதலுக்கு வாய்ப்பில்லை. அத்துடன் கூடுதல் மகசூல் கிடைக்கும். ஆட்கள் பற்றாக்குறையை போக்கவும், கூடுதல் விளைச்சல் கிடைக்கவும், மத்திய, மாநில அரசு இயந்திரத்தின் மூலம் நெல் நடவு செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறது. மேலும், ஒரு ஏக்கருக்கு, 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு, 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக பெறப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், இரண்டாம் போக நெல் நடவு செய்யும் முறையில், 19 ஆயிரம் ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இயந்திரத்தின் மூலம் நெல் நடவு செய்ய, கடந்த ஆகஸ்ட் மாதம், 2 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை, ஆறு மாதத்தில் அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment