வெனிலா பராமரிப்பு: காலநிலையைப் பொறுத்து தேவைக்கேற்ப கொடி களுக்கு நீர்பாய்ச்சுவதை தொடர வேண்டும். கொடியின் தூர்பாகத்தில் போதுமான அளவில் மூடாக்கு இட வேண்டும். இதனால் வேர்கள் நன்றாக பரவ ஏதுவாகிறது. வளர்ந்து வரும் வெனிலா கொடியைத் தாங்கு மரத்தில் ஏற்றி விட வேண்டும். பூக்கள் இன்னமும் தோன்றும். தோட்டங்களில் பூக்கள் மலர்ந்த அன்றே காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும்.
நத்தை மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். வெனிலாத் தோட்டங்களில் கோழிகள் வருவதைத் தடுக்க வேண்டும். தண்டு நுனி அழுகல் அல்லது பூங்கொத்து அழுகல் நோய் காணப்பட்டால் செடியின் மீது 0.2 சத கார்பன்டாசிம் (100 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் என்ற அளவில்) தெளிப்பதால் நோய் பரவுவதைத் தடுக்கலாம்.
நச்சுயிரி நோய் தாக்குதலின் அறிகுறி தென்பட்டதும் அந்தக் கொடியை உடனடியாக அகற்றி அழித்துவிட வேண்டும்.
அறுவடை: காய்கள் அறுவடையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் காய்களின் நுனிப்பகுதியில் வெளிரிய மஞ்சள் நிறம் காணப்படுவது காய்கள் முதிர்ச்சி அடைந்ததற்கு அறிகுறியாகும். அத்தகைய காய்களை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த வெனிலா காய்களை பார்பன் முறையில் பதப்படுத்தலாம். அல்லது அறுவடை செய்தவுடன் பச்சைக் காய்களாக விற்பனை செய்யலாம்.
மிளகு பராமரிப்பு: இளம் செடிகளை தாங்கி, மரத்தின் மீது கட்டி ஏற்றி விட வேண்டும். வாடல்நோய் காணப்படும் தோட்டங்களில் பயிர் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை தோட்டத்தில் மூடாக்கு இடாவிட்டால் உடனே உலர்ந்த இலை தழை மற்றும் களைச் செடிகளைக் கொண்டு செடியில் தூர்ப்பகுதியில் மூடாக்கு இட வேண்டும். இதனால் மண்ணில் ஈரப்பதத்தைப் பாதுகாக்க முடியும்.
சிற்றிலை மற்றும் பில்லோடி ஆகிய நச்சுயிரி நோய்கள் தாக்கிய செடிகளை அகற்றி அழித்து விட வேண்டும். மெதுவாடல்நோய் அறிகுறி தென்பட்டால் கொடிக்கு ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
அறுவடை: அறுவடையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மிளகு கொத்தில் ஒன்று அல்லது இரண்டு மிளகு மணிகள் பச்சை நிறத்திலிருந்து ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்திற்கு மாறுவது தான் மிளகு முதிர்ச்சியடைந்ததற்கு அறிகுறியாகும்.
மிளகு கொத்திலிருந்து மிளகு மணிகளை சுகாதாரமான முறையில் கையால் அல்லது மிளகு பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் பிரித்தெடுக்க வேண்டும். மூங்கில், பாய், கான்கிரீட் உலர்களம், பாலிதீன், தார்ப்பாய் போன்ற சுத்தமான மற்றும் சுகாதாரமான பரப்புகளின் மீது மிளகினை உலர்த்த வேண்டும். இதனால் மிளகின் தரத்தினை மேம்படுத்த முடியும்.
சின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி: கோயம்புத்தூர் த.வே.ப.கழக காய்கறித் துறையின் தலைவர் முனைவர் சரஸ்வதி விவரிக்கிறார். கோ.ஆன்.5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த ரகத்தில் விதை உற்பத்தி செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு. ஆராய்ச்சி முடிவின்படி அக்டோபர் - நவம்பர் மாதங்களில் விதைக்கப்படும் சின்ன வெங்காயத்தில் இருந்து மட்டுமே பூக்கள் வந்து விதை உருவாகின்றது. குறிப்பாக கோயம்புத்தூர் சுற்று வட்டாரங்களில் நிலவும் தட்பவெப்ப நிலையில் மட்டுமே பூக்கள் பூத்து விதைகள் உருவாகின்றன. விதை வெங்காயத்தை நாற்றங்கால் விட்டு அதில் 40 நாட்கள் வளர்த்து நடவு செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது 80 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். இந்த முறையில் ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது. ஆனால் நேரடியாக வெங்காயத்தை விதைக்கும் போது ஏக்கருக்கு 1 டன் வரை விதை தேவைப்படும். ஏக்கருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை விதைப்புக்காய்களாகவே செலவு பிடிக்கும்.
ஆனால் விதை வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 4,300 மட்டுமே ஆகும். காய்கறித்துறையில் சின்ன வெங்காயம் விதை விற்பனை செய்கிறார்கள். முன்பதிவு செய்து கொண்டால் விதை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள். தொடர்புக்கு தொலைபேசி- 0422 - 661 1283
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
Source : Dinamalar
No comments:
Post a Comment