Thursday, November 12, 2015

சம்பா சாகுபடிக்கு பயனளிக்கும் மழை


தற்போது பெய்து வரும் தொடர் மழை சம்பா சாகுபடிக்கு பயன் அளிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதனிடையே, இந்த மழையை கருத்தில்கொண்டு, பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே திருச்சி மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழை திங்கள்கிழமையும் தொடர்ந்தது. பிற்பகலில் சிறிது நேரம் நின்றிருந்த மழை இரவு வரை தொடர்ந்து நீடித்தது.
இதனால் மாநகர் மற்றும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல சாலைகளில் மழைநீர் தேங்கிக் காணப்பட்டதுடன் பல இடங்களில் சாலைகளில் ஆங்காங்கே பள்ளமும் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சம்பா சாகுபடிக்கு பெரும் பலன் அளிக்கும்: சம்பா சாகுபடி மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் பயன் அளிக்கும் வகையில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துவருவதால், சாகுபடி நேரத்தில் தண்ணீர் பெறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. மாயனூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள கதவணை மூலம் 1 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. இது பாசன நேரத்துக்கு பெரும் பயன் அளிக்கும். இதுபோல, காவிரி, கொள்ளிடம் ஆற்றின் பல இடங்களில் கதவணைகளை கட்டினால் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் அயிலை சிவசூரியன்.
பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்: பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 500 கன அடியாக உள்ளதாலும், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாகவும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக உய்யக்கொண்டான் மற்றும் அய்யன் வாய்க்கால் உள்ளிட்ட 7 பாசன வாய்க்கால்களிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை உதவி நிர்வாகப் பொறியாளர் (நீர்வள ஆதாரம்) இளங்கோவன் தெரிவித்தார்.
அதே நேரத்தில் பாசன வாய்க்கால்களுக்கு வரும் மழைநீரின் அளவை கண்காணித்து வருகிறோம். அதிகளவில் தண்ணீர் வரத்து இருந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் பெரும் வாய்க்கால் மற்றும் இதர வாய்க்கால்களில் திறந்துவிடுவதற்கான பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Source : Dinamani

No comments:

Post a Comment