Tuesday, November 24, 2015

கோழி எரு சும்மா தந்தாலும் வேண்டாம்! மண்கெடும் களை வரும்!!


தற்போது பயிர் சாகுபடிக்கு தயாராக உள்ள நிலங்களில் பலரும் மலிவாகக் கிடைப்பதால் டன் கணக்கில் கோழி எரு ரூ.2000 முதல் 4000 வரை செலவு செய்து கொண்டு வந்து சங்கடத்தை தமக்கு தாமே உருவாக்கி வருவது அறியாமையே. இதனால் விவசாயிகள் தலையில் இடி போல களையெடுப்பு கூலி அதிகரித்தும் ஆரம்ப கால போட்டிகளால் பயிர்கள் தன் முழு உற்பத்தி திறனை வெளிக்கொணர முடியாது. நோஞ்சான் செடிகளாக வளரவும் வாய்ப்புள்ளது. அது மட்டுமா? கோழிப்பண்ணை கழிவில் தான் கன்னாபின்னா என ஹார்மோன் மற்றும் கலப்பட விதைகளை தீவனம் தயாரித்திட பயன்படுத்திய புல் விதைகள் ஏராளம் உள்ளதைக் காணலாம். இதில் பண்ணையாளர்கள் காசு ஆசையில் அருகில் உள்ள புழுதி, மண் எல்லாத்தையும் கலந்து காசாக்குவதும் உண்டு.
கோழி எருவை நேரடியாக எந்தத் தோட்டத்திலும் போட்டு பயிர் சாகுபடி செய்திட எந்த பரிந்துரையும் வேளாண் விஞ்ஞானிகள் செய்யாத நிலையில் மட்காத கோழி எருவில் உள்ள காட்டமான யூரிக் அமிலம் நேரடியாக நிலத்தில் பட்டால் மண்ணில் கிருமிகள் அழியும் அபாயமும் உள்ளது என்று அறியாமல் அதிக அளவில் நாம் இடுவதால் அருகில் உள்ள தாவரங்கள் சூட்டில் வெந்து போவதும் உண்டு. மேலும் பறவைகள் அரைகுறையாக சாப்பிட்டு செரிமானமாகாத விதைகள் குறிப்பாக குதிரைவாலி முதலியன நேரடி விதைப்பு போல பரவுவதால் (பல்கிப் பெருகிடும் போது) வரவு நிச்சயம் குறைவு.
இதே நிலை தான் அரைகுறையாக மட்காத தொழுஉரம் இடுவதும் இதர பண்ணைகளில் இருந்து சாண எரு வாங்கி நேரடியாக இடுவதனால் நிகழும். விவசாயிகள் மட்க வைத்து குறிப்பிட்ட காலம் விட்டு அவற்றை உருமாற்றம் உயிரியல் சிதைவு செய்து பயன்படுத்தும் போது தான் அதன் சத்துக்கள் பயிருக்கு கிடைக்கும். களைக்கு மட்டுமல்ல, இக்கோழி எருவால் கார அமிலநிலை பாதிக்கும் போது பயிர்களும் சேதம் நேரும். உரஉபயோகத்திறனும் பாதிப்படைகிறது. நன்மை செய்யும் உயிர்கள் பெருகாது போகும். போதிய உரச்சத்து உள்ள மண்ணில் மெதுவாக கிருமிகள் கோழி எருவை மட்க வைக்க நாட்கள் பல எடுத்துக் கொள்வதால் தற்காலிக பற்றாக்குறையும் ஏற்பட்டு பயிர்களின் ஆரம்ப கால வளர்ச்சியும் பாதிப்படை வதால் நிச்சயம் மட்க வைக்காத எதையும் மண்ணில் பரப்பி ஏதோ பெரிய காரியம் செய்ததாக நினைத்து இரசாயன உரங்கள் இட வேண்டாம். அதனால் பயன் குறைவு. ஆனால் களைகள் பெருகும் பேராபத்து உள்ளதால் நன்கு ஆய்வு செய்து முடிவெடுங்கள்.
டாக்டர். பா.இளங்கோவன்,
தோட்டக்கலை உதவி இயக்குனர்,
உடுமலை, திருப்பூர்.


Source : Dinamalar

No comments:

Post a Comment