Friday, November 27, 2015

கம்பம் பகுதியில் மொச்சை பயிர்களில் "வைரஸ்'தாக்குதல்:மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை


கம்பம்:கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள மானாவாரி காடுகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மொச்சை பயிரில் தொடர் மழை காரணமாக "வைரஸ்' தாக்குதல் காணப்படுகிறது. இதனால் கடுமையான மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தால் ரோட்டிற்கு கிழக்கு பக்கம் உள்ள பகுதிகள் பொன் விளையும் பூமியாக மாறியது. ஆனால், கூடலூரில் ஆரம்பித்து கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வரை பெரியாறு பாசனம் இல்லாததால் விவசாயம் வானம் பார்த்த பூமியாக உள்ளன. சமீபத்தில் 18 ம் கால்வாய் பயன்பாட்டிற்கு வந்த போதும் உறுதி செய்யப்பட்ட பாசன வசதி கிடையாது.

இந்நிலையில், லோயர்கேம்ப் முதல் தேவாரம் வரை ஆயிரக்கணக்கான மானாவாரி காடுகளில் சோளம், கம்பு, மொச்சை, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இதில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படும் பரப்பளவு சமீபகாலமாக குறைந்து விட்டது. மொச்சை சாகுபடி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மொச்சை பயிரில் "வைரஸ்' தாக்குதல் ஏற்பட்டது. வெள்ளை ஈக்கள் செடியில் இருக்கும் பச்சையத்தை உறிஞ்சி விடுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாற்றி விட்டன. இதனால் மகசூல் கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது. இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் வெங்கடாச்சலம் உத்தரவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து கம்பம் உதவி இயக்குநர் அசோகன் தலைமையில்விவசாய அலுவலர்கள் குழு மானாவாரி காடுகளில் ஆய்வு நடத்தி ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இது குறித்து உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
கம்பம் பள்ளத்தாக்கில் தொடர்ந்து மொச்சை சாகுபடி செய்கின்றனர். முதலில், இதை தவிர்க்க வேண்டும். தற்போது மொச்சை பயிரில் தாக்கிஇருப்பது ஒரு நச்சுயிரி நோய். இந்நோயை வெள்ளை ஈக்கள் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பரப்பும். இந்த நோயை கட்டுப்படுத்த "இமிடாகுளோரிபாஸ்' ஒருலிட்டர் தண்ணீரில் 2 மில்லி கலந்து தெளிக்கலாம். களை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வரும் ஆண்டுகளில் மொச்சையை தவிர்த்து சுழற்சி முறையில் குதிரைவாளி, கம்பு, சாமை போன்ற சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்யலாம். அல்லது ஊடுபயிராக சோளம், கம்பு பயிரிடலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


No comments:

Post a Comment