Friday, November 27, 2015

மண் பரிசோதனையை துல்லியமாக மேற்கொள்ள தமிழகத்தில் 5 வேளாண் மையங்களுக்கு நவீன கருவிகள்


 மண் பரிசோதனை முடிவுகளை நவீன கருவிகளைப் பயன்படுத்தி துல்லியமாகக் கண்டறிவதற்கு, தமிழகத்தில் முதல் கட்டமாக திண்டுக்கல், கோவை, நாமக்கல் உள்ளிட்ட 5 வேளாண் அறிவியல் மையங்கள் (கே.வி.கே.) மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 விளை நிலங்களில், காரம் மற்றும் அமிலத் தன்மையை அறிந்து, அதற்கேற்ற வகையில் தளை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை உரமாக பயன்படுத்தி, விளைச்சலை மேம்படுத்துவதற்காக மண் வள பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 மண் வளம் குறித்து துல்லியமாக ஆய்வு செய்யும் போது, இடுபொருள்களை பயன்படுத்துவதில் சிக்கனத்தை கடைபிடிக்க முடியும். அதன் மூலம், ரசாயன உரங்களுக்கு வழங்கப்படும் மானியத்தையும் சிக்கனப்படுத்த முடியும். ஆனால், விவசாயிகள் பரிசோதனை செய்வதற்காக வழங்கும் மண்ணில் உள்ள சத்துக்கள் குறித்த ஆய்வு அறிக்கைகளில் பெரும்பாலும் ஒரே மாதிரியான முடிவுகளாக இருப்பது தெரியவந்தது.
 நாடு முழுவதும், பேரூட்ட சத்துக்களைக் கண்டறிய 1200 மையங்களும், நுண்ணூட்ட சத்துக்களைக் கண்டறிய 400 மையங்களும் உள்ளன. 1200 மையங்கள் மூலம் ஆண்டுக்கு 1.2 கோடி மாதிரிகளை (25 சதவீதம்) மட்டுமே ஆய்வு செய்ய முடியும்ஒரு மண் பரிசோதனை  மேற்கொள்வதற்கு ரூ.160 முதல் ரூ.200 வரை செலவு செய்தாலும், பரிசோதனை முடிவுகள் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனை அடுத்து, மண் பரிசோதனைப் பணிகளை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தியது.
 அதன்படி, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் செயல்பட்டு வரும் இந்திய மண் ஆய்வுக் கழகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நவீன மண் பரிசோதனை கருவிகளை உருவாக்கியுள்ள இந்திய மண் ஆய்வுக் கழகம், அவற்றை வேளாண் அறிவியல் மையங்கள் (கே.வி.கே.) மூலம் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து காந்திகிராம வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் .உதயகுமார் தெரிவித்ததாவது:
 இந்த திட்டம், நாடு முழுவதும் 55 கே.வி.கே. மையங்களிலும், தமிழகத்தில் கோவை,திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கரூர் மையங்களிலும் முதல்கட்டமாக பயன்பாட்டிற்கு வர உள்ளது.
 கார, அமில தன்மையைக் கண்டறியும் கருவி, மண் செரிவூட்டும் கருவி, மண் கலக்கி, நுண் சல்லடை, கனிமங்களைக் கண்டறிவதற்கு 10 வகையான ரசாயனங்கள், மின்வசதி இல்லாத இடங்களில் பயன்படுத்த சிறிய சோலார் பேனல் கருவி, 600 கிராம் வரை அளவிடும் நவீன எடை கருவி உள்ளிட்ட ரூ.75 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் மண் பரிசோதனை மேற்கொள்வதற்காக வழங்கப்படுகிறது.
 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, கே.வி.கே. மையம் மூலம் பயிற்சி அளித்து மண் பரிசோதனை செய்யும் பணிகளைத் துல்லியமாகவும், எளிமையாகவும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்கட்டமாக அனுசரனை ஆராய்ச்சி பாத்தி மற்றும் முதன்நிலை பயிர் பெருக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் கிராமங்களில் நவீன கருவிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றார்.

http://www.dinamani.com/edition_madurai/dindigul/2015/11/27/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE/article3149044.ece



No comments:

Post a Comment