திருவண்ணாமலை மாவட்டத்தில், பயிர் பாதிப்புகளை கணக்கிட்டு, விவசாயிகளுக்கு உடனே வெள்ள நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஐஏஎஸ் அதிகாரியுமான பிரதீப் யாதவ் முன்னிலை வகித்தார்.
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் தொடக்கக் காலமான 2015 அக்டோபர் 1 முதல் நவம்பர் 10 வரை 4 பேர் இறந்துள்ளனர். இவர்களில் மூவருக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல, 17 மாடுகள், 12 ஆடுகள் இறந்துள்ளன. இறந்த மாடு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதமும், ஆடு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதமும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் மொத்தம் 12 முழு குடிசை வீடுகள், 77 பகுதி குடிசை வீடுகள் என மொத்தம் 89 வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்து 700 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் சாலைகளில் விழுந்த 45 மரங்கள் வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத் துறையால் அகற்றப்பட்டுள்ளன.
49 மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய மின் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அரசு அலுவலர்களுடன் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் இணைந்து வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இந்த அளவுக்கு மழை பெய்யவில்லை. எனவே, வேளாண் துறையினர் அனைத்து வட்டங்களிலும் பயிர் பாதிப்புகளைக் கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே வெள்ள நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்யாறு, ஆரணி, வந்தவாசி பகுதிகளில் டெங்கு, மர்மக் காய்ச்சல் பரவாமல் சுகாதாரத் துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையினர் பழைய பள்ளிக் கட்டடங்களை கண்டறிந்து, அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை பாதுகாப்பான இடங்களில் வைத்து பாடம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
மழையால் பழுதடைந்துள்ள மின் கம்பங்கள், மின் மாற்றிகளை மின்வாரியம் உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment