மாவட்டத்தில் மழை சேத விவரங்களை உடனே கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று அனைத்துத் துறையினருக்கு அமைச்சர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியரகத்தில், வடகிழக்கு பருவமழை சேதங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்தினார்.
இதற்கான கூட்டத்தில் ஆட்சியர் எம்.லட்சுமி தலைமை வகித்தார். அமைச்சர் மோகன் பேசியது:
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேத விவரங்களை அந்தந்தத் துறை அலுவலர்கள் உடனடியாக கணக்கீடு செய்து புள்ளி விவரங்களை வழங்க வேண்டும்.
கால்நடை இறப்பு தொடர்பாக, கால்நடை மருத்துவர்கள் இறப்புச் சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும்.
நெற்பயிர்கள், உளுந்து, மக்காச்சோளம், வாழை, மரவள்ளி சேதங்களை வேளாண் துறையினர் கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பயிர்ச்சேத விவரங்களை அளிக்க வேண்டும்.
பொதுப்பணித் துறையினர் அனைத்து ஏரி, குளங்களைப் பார்வையிட்டு கரைகள் பலமாக உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீரை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள 98 ஏரிகளில் நிரப்ப வேண்டும்.
பரிக்கல், மாரனோடை, சேந்தநாடு பகுதி ஏரி உடைப்புகளை சீரமைத்து நீர்பிடிப்பை மேற்கொள்ள போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய் பாதிப்பைத் தவிர்க்க சுகாதாரத் துறையினர் மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும், மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.
மழை பாதிப்பில் இறந்தவருக்கு ரூ.4 லட்சமும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4,100ம், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 ஆயிரமும், மாடு உயிரிழப்பிற்கு ரூ.30 ஆயிரமும், கோழிக்கு ரூ.100ம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அரசுத் துறையினர் மழை பாதிப்பை கணக்கிட்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு உடனடியாக புள்ளி விவரங்களை வழங்க வேண்டும் என்றார்.
எம்பிக்கள், இரா.லட்சுமணன், ராஜேந்திரன், காமராஜ், வெ.ஏழுமலை, எம்எல்ஏக்கள் சிவி.சண்முகம், இரா.குமரகுரு, அழகுவேல்பாபு, அரிதாஸ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.ராதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment