Wednesday, November 18, 2015

நெல் பயிரில் குலை நோய் தாக்குதலைத் தடுக்க வேளாண் அதிகாரி யோசனை


 திருவாடானை பகுதியில் நெல்  பயிர்களைத் தாக்கிய குலை நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி ஆலோசனை தெரிவித்தார்.
 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை, வாணியேந்தல், டி.கிளியூர் பகுதிகளில் குலை நோய்த் தாக்குதல் பரவலாக உள்ளது. இதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை குறித்து திருவாடானை வேளாண் உதவி இயக்குநர் நாகராஜ் கூறியது:
 குலை நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பயிரின் இலை, தண்டு, கணுப்பகுதி, கழுத்துபகுதி, கதிர் ஆகியவை பூஞ்சணத்தால் தாக்கபட்டிருக்கும். சாம்பல் நிற புள்ளிகள் காணப்படும். தீவிர தாக்குதல் ஏற்பட்ட பயிர்கள் முழுவதும் கருகியது போன்ற தோற்றமளிக்கும். இதையே குலை நோய் என்கிறோம். இந்நோய் தாக்கிய பயிர்களில் கதிர் வந்தவுடன் பயிர்கள் சாய்ந்து விடும்.
 மேலாண்மை முறைகள்: வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். பயிரில் தூர் கட்டும் முன்பு நோய்த் தாக்குதல் ஏற்பட்டு இருந்தால் லிட்டருக்கு கார்பன்டாசிம் 1 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். தழைச்சத்து உரம் அளித்தலை தாமதாமாகச் செய்ய வேண்டும்நோய்த் தோன்றும் போது ஹெக்டேருக்கு டிரைசைக்ளோசோல் 400கிராம் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
பூஞ்சானக்கொல்லி மருந்துகளான கார்பென்டாசிம் 200கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 120 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நோய் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குப் பதிலாக சூடோமோனஸ் புளொரசன்ஸ் என்ற எதிர் உயிர் பாக்டீரியத்தை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம்.
இது தவிர நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 1கிலோ சூடாமோனஸ் புளொரசன்ஸ் பாக்டீரியத்தை 200லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் நோயைக் கட்டுப்படுத்தலாம். நோய் எதிர் உயிர் பாக்டீரியாவான சூடோமோனஸை கண்டிப்பாக ரசாயன மருந்துகளுடன் கலந்து இடக்கூடாது. உயிர் உரங்களுடன் இட வேணடும் என தெரிவித்தார்.

http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2015/11/18/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article3134055.ece

No comments:

Post a Comment