Wednesday, November 18, 2015

திராட்சை சொட்டுநீர் பாசனத்துக்கு 100 சதவீதம் மானியம்: ஆட்சியர்



தேனி மாவட்டம், சின்னமனூர் அடுத்த ஓடைப்பட்டியில் நடைபெற்ற திராட்சை மற்றம் மாதுளை கருத்தரங்கு நிகழ்ச்சியில், திராட்சை விவசாயத்துக்கு  சொட்டுநீர் அமைத்திட 100 சதவீதம் மானியம் வழங்குவதாக, மாவட்ட ஆட்சியர் . வெங்கடாசலம் அறிவித்தார்.
 இந்த கருத்தரங்கை தொடக்கிவைத்துப் ஆட்சியர் பேசியதாவது: உத்தமபாளையம் அருகேயுள்ள ஆணைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி மையத்தின் மூலமாக   நவீன தொழில்நுட்பங்கள் குறித்து, விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திராட்சை அதிகளவில் பயிரிடப்படுகிறது. திராட்சை ஏற்றுமதி மூலம் ரூ.40,861 கோடிக்கு அந்நிய செலாவணி கிடைத்துள்ளது. மொத்த உற்பத்தியில் 80 சதவீதம் தேனி மாவட்டத்தில் கிடைக்கிறது. பிற மாநிலங்களான மகாராஷ்டிரத்தில் ஆண்டுக்கு ஒருமுறையும், ஆந்திரத்தில் ஆண்டுக்கு இரு முறையும் திராட்சை மகசூல் நடைபெறுகிறது. ஆனால், தேனி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 3 முறை மகசூல் செய்யப்படுகிறது.
  இதனால், தேசிய தோட்டக்கலைத் துறை சார்பில் ஹெக்டேருக்கு ரூ. 40 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திட 100 சதவீதமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இது தவிர, திராட்சை பந்தல் அமைப்பதற்காக ரூ. 2 லட்சம் வரை மானியம் வழங்கும் வழிமுறைகள் உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, விவசாயிகள் இதுபோன்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
  இந்நிகழ்ச்சிக்கு, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சின்னராஜ், திராட்சை ஆராய்ச்சி மைய பேராசிரியர்களான சுப்பையா மற்றும் பார்த்திபன், ஓடைப்பட்டி பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரி மனோகரன், திராட்சை மற்றும் மாதுளை பயிரிடும் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
  

No comments:

Post a Comment