Wednesday, November 18, 2015

முதல்போக சாகுபடிக்காக சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


பெரியகுளம்
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து விவசாயிகளின் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
2 ஆயிரத்து 865 ஏக்கர்
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து மொத்த கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. இந்த அணையின் மூலம் பெரியகுளம், தாமரைக்குளம், பாப்பையன்பட்டி ஆகிய கண்மாய்களுக்கு நீர்வரத்து இருக்கும்.
அத்துடன் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் சுமார் 2 ஆயிரத்து 865 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் தென்கரை, லட்சுமிபுரம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் வடுகபட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கான குடிநீரும் இந்த அணையின் மூலமே வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மார்ச் 15–ந் தேதி வரை...
அடுத்த மாதம் (டிசம்பர்) 15–ந் தேதி வரை இந்த அளவு தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படும். பின்னர் 16–ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15–ந் தேதி வரை வினாடிக்கு 27 கனஅடி வீதமும், அதையடுத்து மார்ச் 15–ந் தேதி வரை வினாடிக்கு 25 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.
சோத்துப்பாறை அணைப்பகுதியில் நடந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். பெரியகுளம் நகரசபை தலைவர் ஓ.ராஜா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவக்குமார், லாசர் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   

No comments:

Post a Comment