Friday, November 13, 2015

மல்பெரி நடவு செய்வதற்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


மல்பெரி நடவு செய்வதற்கான மானியம் பெற விரும்பும் பட்டு வளர்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் மல்பெரி சாகுபடி திட்டம் தொடங்கப்பட்டு 2001-ஆம் ஆண்டு முதல் ஜப்பான் நிதி உதவியுடன் கூடிய ஜெய்கா திட்டமும் செயல்படுத்தப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் பட்டு தொழில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 100 முட்டை கொண்ட தொகுதிகளுக்கு சராசரியாக 40 கிலோ பட்டுக்கூடுகள் என்ற நிலைமாறி தற்போது, 75 கிலோ வரை பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 4,541 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், 2,224 விவசாயிகள் பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலமாக, 22,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கடந்த 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 55.67 கோடி மதிப்பிலான 1,642 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டு அதில் 250 மெட்ரிக் டன் கச்சாபட்டு உற்பத்தி செய்யப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியோடு பட்டு வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதில், விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, வீரிய இன மல்பெரி நடவுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 10,500, மல்பெரி தோட்டங்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க ஏக்கருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 30,000, இதர விவசாயிகளுக்கு ரூ. 22,500, தனி புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ. 87,500 வரையிலும், புழு வளர்ப்பிற்காக ரூ. 52,500 மதிப்பில் புழு வளர்ப்பு தளவாடங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
 2015-16 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் வரை 538 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி நடவும், பட்டுக்கூடுகள் அறுவடை 987 மெட்ரிக் டன்னும், இதில் வெண்பட்டுக் கூடுகள் 877 மெட்ரிக் டன்னும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பட்டு வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.



http://www.dinamani.com/edition_coimbatore/erode/2015/11/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE/article3126083.ece

No comments:

Post a Comment