Friday, November 13, 2015

மும்மடங்கு மகசூல் கிடைக்கும் ராமநாதபுரத்தில் பசுமைக்குடில் சாகுபடி தொழில்நுட்பம் அறிமுகம்


மும்மடங்கு மகசூல் கிடைக்க வகை செய்யும் பசுமைக்குடில் சாகுபடி தொழில்நுட்ப முறை ராமநாதபுரத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
  ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பெரும்பாலும் சாகுபடிக்கு பருவமழையை நம்பியே உள்ளதால் மகசூலின் அளவும், தரமும் அவ்வப்போது மாறிக்கொண்டே வருகிறது. இதனால் விவசாயிகள் சரியான வருமானம் பெற முடியாத நிலை உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையானில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதித் திட்டத்தின் மூலம் பசுமைக்குடில் அமைத்து சாகுபடி செய்யும் புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இப்புதிய தொழில்நுட்ப முறையில் விளைந்த காய்கறிகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் பார்வையிட்டார்.  பின்னர் அவர் கூறியது:
 பசுமைக்குடில் என்பது ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்  உறையினால் போர்த்தப்பட்ட ஒரு அமைப்பாகும். இதனுள்ளே பயிரிடப்படும் பயிர்கள் இரவில் வெளியிடுகிற கரியமில வாயு கூடாரத்தினுள்ளே தங்கி விடுவதால் பகலில் ஒளிச் சேர்க்கை அதிகமாகி விளைச்சலும் அதிகமாகிறது. உலக அளவில் பல நாடுகளில் பசுமைக்குடில் தொழில்நுட்ப முறை உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரம், கர்நாடகம், பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமான அளவில் பசுமைக்குடில் சாகுபடி ஏற்படுத்தப்பட்டு மலர்ப்பயிர்கள், காய்கறிப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி பகுதிகளில் தான் அதிக அளவில் பசுமைக் குடில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்புதிய தொழில் நுட்பம் முதல் முதலாக ராமநாதபுத்தில் விவசாயிகளின் பயனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.
விவசாயிகள் நேரில் பார்வையிடலாம்
திறந்த வெளி சாகுபடியை விட இதில் 3 மடங்கு அதிக மகசூல் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் இயற்கையாக காற்றோட்டமுள்ள பசுமைக்குடில் 1000 சதுர மீட்டரில் அமைக்க ஆகும் செலவு ரூ.9.5லட்சம். அதில் பயிர் சாகுபடி செய்வதற்கான செலவு ரூ.1லட்சம் ஆகும்.இந்த முறையில் வெள்ளரியில் 15 மெட்ரிக் டன்,குடை மிளகாய் 20 மெட்ரிக் டன் மகசூல் பெறலாம். பசுமைக்குடில் அமைத்திட விருப்பமுள்ள விவசாயிகள் சுந்தரமுடையான் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடிலை பண்ணை வேலை நேரங்களில் நேரில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.


http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2015/11/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article3125874.ece

No comments:

Post a Comment