Tuesday, November 17, 2015

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்


 சென்னை, நவ.18-

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நல்ல மழை பெய்தது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம் ஆகிய வட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அங்கிருந்து நகர்ந்து ஆந்திராவை நோக்கி சென்றது.

தற்போது அந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆந்திரா மற்றும் வடதமிழக வங்ககடல் பகுதியில் நிலைகொண்டிருப்பதாகவும், இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வங்ககடலில் நேற்று (நேற்று முன்தினம்) நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுபகுதி, தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக வங்க கடல் பகுதியில் நீடிக்கிறது. அது தற்போது வடக்கு, வடமேற்கு திசைநோக்கி நகருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று), தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டமான திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

சென்னையை பொறுத்தவரையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும்.

அடுத்த நிகழ்வு எதுவும் இதுவரை ஏற்படவில்லை. வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யக்கூடிய மழை வழக்கம்போல் பெய்யும். ஆந்திர கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பதால், வட தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது கவனத்துடன் இருக்க வேண்டும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

திருத்தணி 9 செ.மீ., சோழவந்தான் 8 செ.மீ., பள்ளிப்பட்டு, சிட்டம்பட்டி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் தலா 7 செ.மீ., காட்டுக்குப்பம், செங்கல்பட்டு தலா 6 செ.மீ., பூந்தமல்லி, வாடிப்பட்டி தலா 5 செ.மீ., சிவகங்கை, மதுரை (தெற்கு), சென்னை மீனம்பாக்கம், திருவதனை, எண்ணூர், தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதற்கிடையே இந்தியாவின் தெற்கு தீபகற்ப பகுதியில் (தமிழ்நாடு) பல இடங்களில் வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று புனே வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இந்தியாவின் மேற்கு பகுதியில் புதிதாக ஒரு தாழ்வு நிலை உருவாகி இருப்பதாகவும், இமயமலையின் மேற்கு பிராந்தியத்தில் வருகிற 22-ந் தேதி முதல் இதன் தாக்கம் இருக்கும் என்றும் அது கூறியுள்ளது.



No comments:

Post a Comment