இறைவன் இவ்வுலகு உய்ய பல்வேறு இயற்கை உணவுப் பொருட்களையே மருந்தாகவும் வழங்கியிருக்கிறான். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் வள்ளிக்கிழங்கு. இதன் முக்கியத்துவம் கருதியும், இதனுள் அடங்கியிருக்கும் ஊட்டச் சத்துகளை மனதில் இருத்தியும் ‘ஏழைகளின் உணவு’ என்று சிறப்பித்து கூறப்படுவது உண்டு.
கொடி வகையைச் சார்ந்த தாவரமான வள்ளிக்கிழங்கு, இனிப்புச்சுவை மிகுந்த கிழங்கு என்பதால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்று பெயர் பெற்றுள்ளது. இதுதவிர, மரவள்ளி, மஞ்சள் மரவள்ளி, சீமை மரவள்ளி, சிவப்பு வள்ளி, சீன வள்ளி என்று வேறு பல வகைகளும் வள்ளிக்கிழங்கில் அடையாளம் சொல்லப்பட்டுள்ளன. இந்த அத்தியாயத்தில், சர்க்கரை வள்ளிக்கிழங்கின் முக்கியத்துவத்துடன் மரவள்ளிக்கிழங்கின் மகிமையினையும் சேர்ந்தே அறிய இருக்கிறோம்.
முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பற்றி பார்ப்போம்.வெண்மை, சிவப்பு என இருநிறங்களிலும் விளையும் சர்க்கரை வள்ளிக்கிழங்குக்கு Ipomoea batatas என்பது தாவரப் பெயர் ஆகும். இதன் இனிப்புச்சுவை காரணமாக ஆங்கிலத்தில் Sweet potato என்று அழைக்கப்படுகிறது. ஆயுர் வேதத்தில் ரக்த கந்தா என்ற பெயரால் குறிப்பிடுவது வழக்கம். அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உணவுக்காக இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.
வள்ளிக்கிழங்கின் மருத்துவ குணங்கள்
சிறுநீர் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறப்பான மருந்து என்று சர்க்கரை வள்ளிக்கிழங்கைச் சொல்லலாம். சிறுநீர் வலியோடு வெளியாதல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறிது நேரம்கூட அடக்க இயலாமை, சிறுநீர்த்தாரை எரிச்சல் ஆகிய துன்பங்களைப் போக்குவதற்கு அற்புத மருந்தாக உதவுகிறது வள்ளிக்கிழங்கின் வேர்ப்பகுதி.இந்த வெயில் காலத்துக்கு ஏற்ற, தாகத்தை தணிக்கவல்ல மருந்து வள்ளிக்கிழங்கு என்று சொன்னால், அது மிகையில்லை.
இதன் முழுத் தாவரமும் காய்ச்சலைத் தணிக்கவும், சரும நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் பயன்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைப்பதால் அதனுடைய இனிப்புச்சுவை கூடுவதை அறிந்திருப்போம். இதற்குக் காரணம், வேக வைக்கும்போது வள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து Maltose என்னும் இனிப்புப் பொருளாகவும் Dextrins எனும் இனிப்புப் பொருளாகவும் மாறுபடுவதுதான்.
வள்ளிக்கிழங்கு மருந்தாகும் விதம் வள்ளிக்கிழங்கின் இலையைத் தீநீர் இட்டுக் குடிக்கக் கொடுப்பதால் வயிற்றிலுள்ள கீரிப்புழுக்கள், நாக்குப்பூச்சி என்னும் மண் புழுக்கள், நாடாப் புழுக்கள் உட்பட தேவையற்ற புழுக்கள் உடலிலிருந்து வெளியேறும். வள்ளிக்கிழங்கின் சாறு எடுத்து ஏதேனும் ஓர் எண்ணெயில் இட்டுக்காய்ச்சி மேற்பூச்சாகப் பயன்படுத்துவதனால் புண்கள் விரைவில் ஆறும். தொழுநோய் புண்களையே ஆற்றும் வல்லமை வள்ளிக்கிழங்கின் சாறுக்கு உண்டு. இதன் இலையை அரைத்து மேற்பூச்சாகப் பூசினால் தேள் கடியினால் உண்டாகும் வலி உடனே குறையும்.
Source : Dinakaran
No comments:
Post a Comment