அதிக குளிர்ச்சியான இடங்களில் கறவை மாடுகளை கட்ட வேண்டாம் என கால்நடை வளர்ப்போருக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி அறுவுறுத்தினார்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், கருப்பம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை வழங்கி வருவதை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டப் பிறகு ஆட்சியர் கூறியது:
கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், அனைத்து பகுதிகளிலும் சிறப்பு மருத்துவக் குழு நியமித்து, அந்தந்த ஊராட்சிகளில் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து தேவைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, குளிர்காலமாக உள்ளதால் காய்ச்சல் போன்ற நோய்த் தாக்குதல் இருந்தாலும், உடனடியாக சிகிச்சை மூலம் சரிசெய்யப்படுகிறது.
மாவட்டத்தில், கால்நடைகளுக்கு கொடிய நோய்த் தாக்குதல் அறிகுறி இல்லை. கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதிகளில் நடைபெறும் மருத்துவ முகாமில், மருத்துவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தேவையற்ற வீண்வதந்திகளை நம்ப வேண்டாம்.
மேலும், கொசுக்கள் தாக்காதவாறு கால்நடைகளை தூய்மையான இடத்தில் கட்ட வேண்டும். அதிக குளிர்ச்சியான இடங்களில் கறவைமாடுகளை கட்ட வேண்டாம். கறவைமாடுகளில் பால்கறக்கும் நபர் ஒவ்வொரு மாட்டிலும் பால்கறந்த பிறகு சோப்பு மூலம் கைகளை நன்றாக சுத்தம்செய்த பிறகே, அடுத்த மாட்டில் பால்கறக்க வேண்டும். கறவைமாடுகள் மூலம் வைரஸ் கிருமிகள் எளிதாக பரவ வாய்ப்புள்ளதால், சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.
அதேபோல, மாட்டின் வாய்பகுதி மற்றும் கால்குளம்பு பகுதியில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக கால்நடை மருத்துவர்களிடம் சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கறவைபசுக்களுக்கு ஊசிபோட்டால் பால் குறைந்துவிடும் என்ற தவறான எண்ணத்தை மாடு வளர்ப்போர் கைவிட்டு, சரியான நேரங்களில் மாடுகளுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்றார். தொடர்ந்து, கருப்பம்பாளையம் மற்றும் அப்பிபாளையம் ஊராட்சிப் பகுதிகளில் சிறப்பு கால்நடை மருத்துவக் குழுவினர் சிகிச்சை வழங்கி வருவதை ஆட்சியர் பார்வையிட்டார்.
பிறகு, மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே மாலநாயக்கன்பட்டியில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு, மாணவர்களின் வருகைப் பதிவேடு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்றவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment