Sunday, November 15, 2015

மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா: முதல்வர் ஜெ., துவக்கி வைப்பு



திருச்சி: ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவை, பணிகள் நிறைவடையாத நிலையில் முதல்வர் ஜெயலலிதா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த, 2012ம் ஆண்டு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகேயுள்ள மேலூர் மேல் அணைக்கட்டு காப்புக்காட்டில், 27 ஏக்கரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சிப் பூங்கா அமைக்க ரூ. 8.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி மூலம் கடந்த, 2012 இறுதியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கியது. கடந்த, மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த பணிகள், இடையே நிர்வாக காரணங்களால் மெதுவாக நடந்தது. பூங்காவில் இன்னும் சில பணிகள் மட்டும் நிறைவடையாத நிலையில், நேற்று முன்தினம், முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூங்காவை துவக்கி வைத்தார். உலகின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கோக்கனட் சிரிக் என்ற இடத்தில் உள்ளது. அதேபோல், உலகில் மிகப்பெரிய உள்ளரங்க வண்ணத்துப்பூச்சி பூங்கா துபாயில் உள்ள நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி பூங்கா திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான முக்கொம்பு அருகே அமைந்துள்ளது, இம்மாவட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி, தமிழகம் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு கண்ணுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 


நட்சத்திர வனமும் துவக்கம்: வண்ணத்துப்பூச்சி பூங்காவில், பெயர் ராசிக்கு ஏற்றாற்போல், 27 நட்சத்திரங்களின் மரங்கள் நடப்பட்ட நட்சத்திர வனமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர வனமும் நேற்று முன்தினம் முதல்வரால் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.


அவல நிலையுடன் திறப்பு: வண்ணத்துப்பூச்சிப் பூங்காவுக்கு செல்ல திருச்சியிலிருந்தோ, முக்கொம்பில் இருந்தோ செல்ல சரியான போக்குவரத்து வசதியில்லை. இருக்கும் சாலைகள் மோசமாக உள்ளது. வண்ணத்துப்பூச்சிகளின் கூடாரங்கள் கிழிந்து போயுள்ளது. வண்ணத்துப்பூச்சி வளர்ப்பு 'ஏசி' கூடத்தின் சுவர்கள் விரிசல் விட்டுள்ளன. குழந்தைகள் விளையாடுவற்கு அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களும் உடைந்து காணப்படுகின்றன. ஆகையால் திறப்பு விழா கண்டும் பூங்கா முழுமை பெறாமல் உள்ளது. குறைகளை சரிசெய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குரங்கு மறுவாழ்வு மையம்: திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் எம்.ஆர்.பாளையம் என்ற இடத்தில், ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குரங்குகள் மறுவாழ்வு மையத்தையும் முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்துள்ளார்.


 

No comments:

Post a Comment