Friday, November 13, 2015

பாசனத்துக்கு பிளவக்கல் அணை திறப்பு


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக வியாழக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
  சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் வி.செந்தில்குமாரி முத்துராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள் கி.காளிமுத்து, சு.கனகுஅம்மாள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் தி.ராமசாமி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன் பாசனத்திற்காக தண்ணீரைத் திறந்துவிட்டார். அப்போது அவர் கூறியதாவது: பெரியாறு அணையின் முழு கொள்ளளவு 192 மில்லியன் கனஅடியாகும். கோவிலாறு அணையின் முழு கொள்ளவு 133 மில்லியன் கனஅடியாகும். இன்றைய கொள்ளளவாக பிளவக்கல் பெரியாறு அணையில் 174.15 கனஅடி நீரும், கோவிலாறு அணையில் 46.75 கன அடி நீரும் உள்ளது.   விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக அரசின் உத்தரவுப்படி பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.   பெரியாறு அணைக்கு விநாடிக்கு 44.40 கன அடியும், கோவிலாறு அணைக்கு 0.08 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து, (இரு அணைகள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ) நீர் இருப்பைப் பொருத்து விநாடிக்கு 150 கன அடி வீதம் கண்மாய் பாசனத்திற்கும், பெரியாறு அணையிலிருந்து 3 கன அடி வீதம் கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  
 இதன் பயனாக வத்திராயிருப்பு பகுதிகளில் உள்ள கான்சாபுரம், கொடிக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பூரிப்பாறைக்குளம், சீவனேரி கண்மாய், குணவந்தனேரி கண்மாய், கொடிக்குளம், பெத்தான்குளம், புங்கன்குளம், வத்திராயிருப்பு பெரியகுளம், விராகசமுத்திரம் கண்மாய் ஆகிய 8 கண்மாய்கள் பயன்பெறும். இதன் மூலம் 1167.85 ஹெக்டேர் நிலங்களும், நேரடி கால்வாய் பாசனம் மூலம் 174.69 ஹெக்டேர் நிலங்களும் பாசன வசதி பெறும்.  விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு  மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.


http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2015/11/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-/article3125892.ece

No comments:

Post a Comment