Thursday, November 12, 2015

நோயற்ற வாழ்வுக்கு விஷமற்ற உணவு: சாதித்த குமரனுக்கு குவிகிறது பாராட்டு



பந்தலுார் :இயற்கை விவசாயத்தில் சாதித்து வரும் பந்தலுார் விவசாயிக்கு, பாராட்டுகள் குவிகின்றன.அதிகரிக்கும் மக்கள் தொகை, உணவுத் தேவையால், இயற்கை விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. பயிர்கள் விரைவாக வளரவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும் அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன; இது, மனிதர்களுக்கு, பல நோய்களை ஏற்படுத்துகின்றன.
இயற்கை விவசாயம் தான், மாற்றத்துக்கான வழி என்ற வகையில், நீலகிரி மாவட்டம், பந்தலுார் மாங்கோடு பகுதி விவசாயி குமரன் களமிறங்கியுள்ளார்; தன்னுடைய ஆறு ஏக்கரில்,
முழுவதுமாக இயற்கை விவசாயம் மேற்கொண்டுள்ளார்.

தேயிலை, கரும்பு, மரவள்ளி, காய்கறிகள், குருமிளகு ஆகியவை விளைவிக்கப்படுகின்றன. சாணம், கோமியம், பருப்பு துாள், வெல்லம், கசப்பு தன்மை கொண்ட தழைகளை, உரமாக மாற்றி, பயிர்களுக்கு பயன்படுத்துகிறார். இப்பகுதியில் உள்ள பலர், தோட்டத்துக்கே வந்து, காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இவரின் செயல்பாடுகளில் கவர்ந்த தோட்டக்கலைத் துறை, 'முழு இயற்கை விவசாயி' என்ற பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது.

விவசாயி குமரன் கூறியதாவது:விரைவாக லாபம் கிடைக்க வேண்டும் என, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி நிலத்தை கெடுத்து வருகிறோம். இவற்றில் விளையும் காய்கறிகள், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதிலிருந்து மீள, இயற்கை விவசாயம் தான் சிறந்தது.

இயற்கை விவசாயத்தில் பயன்பெற, பொறுமை அவசியம்; நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு, விவசாயத்துக்கு தேவையான பாசன வசதியும் கிடைக்கிறது. தோட்டக்கலைத் துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், இயற்கை விவசாயத்தை மேலும் அதிகரிக்கலாம். இதுகுறித்து, இலவசமாக பயிற்சி தரவும் தயாராக உள்ளேன்.இவ்வாறு குமரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment