Monday, January 4, 2016

மரம், செடிகளை வளர்ப்போம்; பூமியை குளிர்விப்போம்


சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர் ஆரோக்கியமான வாழ்விற்கான அடிப்படை காரணிகள். பெட்ரோல், டீசல் வாகனங்கள், ஆலைகளின் புகையால் நாள் தோறும் காற்று மாசுபட, அவற்றை மரங்கள், செடிகள் சுத்திகரித்து மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜனை அளிக்கின்றன. முன்னோர்கள் வீடுகளில் இயற்கை முறையில் தோட்டம் அமைத்து அன்றாட காய்கறிகளை தோட்டத்தில் இருந்தே பெற்று வந்தனர்.
இதன் மூலம் நாள்தோறும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பெற்ற தோடு உடலுக்கு தேவையான சுத்தமான காற்றையும் சுவாசித்து வந்தனர். நாகரிக வளர்ச்சி, நகர் மயமாதல், மக்கள் தொகை காரணமாக தற்போது பல அடுக்கு மாடி வீடுகள் உருவாகி, காற்றுவந்து செல்வதற்கும் வசதியில்லாத வகையில் இடநெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் மாசடைந்த காற்று, சுகாதாரமில்லாத குடிநீரை குடித்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்
சாத்தூர் அருகே என்.சுப்பையாபுரத்தில் முன்னோர் வாழ்ந்த முறையில் வீட்டில் தோட்டம் அமைத்து அதை நாள்தோறும் பராமரித்து வரும் ஜே.முத்துக்குமார் கூறுகையில், ""வீட்டில் தோட்டம் அமைத்து பராமரிப்பது மனதிற்கு நிம்மதி , மகிழ்ச்சியை தருகிறது. சிட்டுக்குருவிகள் மற்றும் பல வண்ண பறவைகள் கீச்...கீச் என மரங்களில் அமர்ந்து எழுப்பும் ஒலி மனதில் உள்ள கவலைகளை போக்குகிறது.
மாதுளை, கொய்யா, தென்னை, கறிவேப்பிலை மரங்களை வீட்டு தோட்டத்தில் பராமரிப்பதால் ,வெயில்காலத்தில் வெப்பம் தெரியாது குளு, குளு என இருக்கும். செயற்கையான குளிர்ச்சிக்கு மத்தியில் "ஏசி' அவசியம் இல்லை. காலியிடத்தில் மரங்கள், காய், பழச்செடிகளை பயிரிட்டால் அவை வளர வளர மண்ணும் குளிரும்... நமது வயிறும் குளிரும். எங்கள் கிராமத்தினர் பலரும் மரம், செடிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்பதால், ஊராட்சித்தலைவர் மகாலட்சுமி தலைமையில் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 370 மரக்கன்றுகளை கிராமப்பகுதியில் நட்டு பராமரித்து வருகிறோம். இதை பாராட்டி மாநில அரசானது எங்கள் ஊராட்சிக்கு "பசுமை கிராமம்' விருது வழங்கி உள்ளது. சுத்தமான காற்று, போதுமான மழை, நோயில்லாமல் வாழ வீடுகள் தோறும் தோட்டம் அமைக்கலாம். முடியாதவர்கள் தங்கள் வீடுகள் முன்பு உள்ள காலியிடத்தில் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்ப்பதன் மூலம் நாடு, வீடும் மாசில்லாத நிலையை உருவாக்கும் ,''என்றார்.
பாலிதீன் விழிப்புணர்வு
இல்லையே
சங்கரேஸ்வரன் (சாத்தூர்): பாலிதீன் பைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் தடைவிதித்துள்ள போதும். பலரும் பாலிதீன் பைகளையே பயன்படுத்துகின்றனர். பாலிதீன் பைகளில் உணவு பொருட்களை வாங்கி சென்று பயன்படுத்தி விட்டு கீழே வீசி எறிவதால் இவற்றை உண்ணும் கால்நடைகள் பலியாகின்றன. மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பாலிதீன் பைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
வியாபாரிகளுக்கு தரமான மறு சுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய அதிக மைக்ரான் எடையிலான பாலிதீன் பைகளையே வழங்க வேண்டும்.
பாலிதீன்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட வேண்டும்.
முள் செடிகளை அகற்றுவோம்
நீர்நிலைகளை பாதுகாப்போம்
ஞானக்குமார் (சாத்தூர்) : வைப்பாறு, உப்போடை நதி, வேண்டாங்குளம் கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிகளவில் சீமைக் கருவேலமரங்கள் முளைத்துள்ளன. இதனால் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன், தேங்கி நிற்கும் தண்ணீரின் தன்மையும் பாதிக்கிறது. அதிகளவு நீரை ஊறிஞ்சி வறட்சியை கொண்டு வரும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசுடன் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். வீட்டின் அருகில் செடியாக இவை முளைக்கும் போதே பொதுமக்கள் அகற்ற வேண்டும். இதன் மூலம் இத்தகைய செடிகள் வளர்ச்சியடைவது தடைபடும். நீர் நிலைகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். ஆறு, குளம், கண்மாய், ஊரணிக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களில் உள்ள முள்செடிகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மாசில்லா நீர் நிலைகள் உருவாகும்.

Source  Dinamalar

No comments:

Post a Comment