Monday, January 4, 2016

கோவையில் வேளாண் கண்காட்சி அறிமுக விழா மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா துவக்கினார்

கோவை கொடிசியா சார்பில் வரும் ஜூலையில் நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சிக்கான துவக்க விழா நேற்று கோவையில் நடந்தது. இதை மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா துவக்கி வைத்தார். கோவை கொடிசியா சார்பில் வரும் ஜூலை 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை கோவையில் வேளாண் கண்காட்சி (அக்ரி இன்டெக்ஸ் 2016) மற்றும் கயறு கண்காட்சி நடக்க உள்ளது. அதற்கான துவக்கவிழா நேற்று கொடிசியாவில் நடந்தது. இதில் கொடிசியா செயலாளர் திருஞானம் வரவேற்றார். கொடிசியா தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். வேளாண் பல்கலை துணை வேந்தர் ராமசாமி, வேளாண் கண்காட்சி தலைவர் சசிகுமார், கயறு கண்காட்சி தலைவர் அஜித்குமார், கண்காட்சி செயலாளர் குமாரராஜா, முன்னாள் எம்.பி.,ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். 
இதில் வேளாண் கண்காட்சி மற்றும் கயறு கண்காட்சி விளக்க கையேட்டை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா வெளியிட்டார். பின்னர் தொழில்துறையினருடனான கலந்துரையாடல் நடந்தது. இதில் கோவையிலுள்ள பல்வேறு தொழில் அமைப்பின் நிர்வாகிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்னர் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா பேசுகையில், ‘கோரிக்கை மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படும். குறு, சிறு தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு மானிய திட்டங்களும், அதற்கான நிதியும் போதுமான அளவில் உள்ளது. இதை குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ தயாராக இருக்கிறது’ என்றார்.  கொடிசியா தலைவர் பொன்னுசாமி கூறுகையில், ‘வேளாண் கண்காட்சியில் தேசிய, சர்வதேச கயறு கண்காட்சி முக்கியத்துவமாக இடம்பெறுகிறது. கண்காட்சியில் இடம்பெறவுள்ள அரங்குகளுக்கான புக்கிங்கை மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா துவக்கி வைத்துள்ளார். முதல்கட்டமாக கண்காட்சியின் ஸ்பான்ஸர் நிறுவனங்கள் புக்கிங் செய்து துவக்கி வைத்துள்ளனர். தொடர்ந்து கொடிசியாவின் அனைத்து ஹால்களிலும் அரங்குகள் நிரம்பும் வகையில் புக்கிங் நடைபெறவுள்ளது’ என்றார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment