Tuesday, November 17, 2015

மண்ணின் ஈரத்தை உறிஞ்சும் கருவேல மரங்கள் : தானியம் பயிரிட்டு தரிசு நிலத்தை தங்கமாக்கலாம் : வேளாண்துறையினர் வேண்டுகோள்



காரைக்குடி: தற்போது பெய்துள்ள மழையால் தேங்கியுள்ள நீர் பரப்புகளில்,பெரும்பாலும் கருவேல மரங்களே சூழ்ந்துள்ளது. இவற்றை அழித்து சிறு தானியங்களை பயிரிட முன் வர வேண்டும் என வேளாண்மை துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நெல், கரும்பு, தினை, சோளம், சாமை, உளுந்து, அவரை, துவரை என பல்வேறு தானிய மற்றும் பயிர்களை விவசாயம் செய்த நிலங்கள் கருவேல மரங்களின் வாழ்விடமாகி தரிசாக காட்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுக்கு பிறகு தற்போது தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. பூமியின் மேற்பரப்பு ஈரமாகி உள்ளது. நெல் விவசாயிகள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தரிசாக கிடக்கும் நிலங்களிலோ காட்டு கருவேல மரங்கள் வளர்ந்து, நீர்வளத்தை உறிஞ்சி கொண்டிருக்கிறது. தரிசாக கிடக்கும் நிலங்களில் சிறுதானியங்களை பயிரிட்டு, வருமானத்தை பெருக்கலாம்.
தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை தவிர்த்து குறுகிய காலத்தில் மகசூல் தரும் சிறுதானிய பயிர்களான குதிரைவாலி, வரகு, பனிவரகு, தினை, சாமை போன்றவற்றை பயிரிடலாம். இவற்றில் தாது பொருட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளது. வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது: குதிரைவாலி 95 நாட்களில் பலன் தரும். ஒரு ஏக்கில் 800 கிலோ மகசூல் கிடைக்கும். வரகு 100 நாட்களில் ஆயிரம் கிலோவும், பனிவரகு 70 நாளில் 700 கிலோவும், தினை 90 நாளில் 700 கிலோவும், சாமை 80 நாளில் 1,100 கிலோவும் மகசூல் தரக்கூடியது. இந்த வகை தானியங்கள் அனைத்து மண் வகையிலும் வளரக்கூடியது. மண்ணில் கரிமசத்து, மணிசத்து குறைவாக இருப்பதால், தொழுவுரம், தென்னை நார்கழிவு இட்டு உழுதல் வேண்டும். தேவையான நுண்ணூட்ட சத்துக்களை அடியுரமாக இடுதல் வேண்டும். விதைத்த 20 மற்றும் 40-வது நாளில் களை எடுக்க வேண்டும். சிறுதானிய பயிர்களில் குறைந்த நாள்களுக்குள் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. இதனால், நோயின் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்கிறது. நெல்லுக்கு ஆகும் செலவை விட இதில் செலவு மிக குறைவு. சிறுதானியங்களில் மதிப்பூட்ட பொருட்களை தயாரித்து சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. எனவே, தரிசாக கிடக்கும் நிலங்களில், விவசாயிகள் இவற்றை பயிரிட்டு லாபம் பெறலாம், என்றார்.



No comments:

Post a Comment