Thursday, November 19, 2015

சம்பா, தாளடி நெல் சாகுபடி விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய அழைப்பு


 சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வரும் டிசம்பர் இறுதிக்குள் பயிர்க் காப்பீடு செய்யலாம் என்றார் பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மு. சுப்பையா.

இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பயிர்களுக்கு சேதம் ஏற்படும்போது விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதியுதவி செய்வது தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 2,420 எக்டரில் சம்பா மற்றும் தாளடிப் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்ச் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், குத்தகை சாகுபடி செய்துள்ளோர் அனைவரும் பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேரலாம்.
பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் காப்பீடு பிரிமியத் தொகையை சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் செலுத்தலாம். பயிர்க் கடன் பெறாத மற்ற விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வணிக வங்கிகள் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பிரிமியத் தொகையை செலுத்தலாம்.
உத்தரவாத மகசூல் ரூ. 14,904-க்கு காப்பீடு செய்ய, கடன் பெறும் மற்றும் கடன் பெறாத இதர விவசாயிகள் 50 சதம் மானியம் போக பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 149 செலுத்த வேண்டும். கடன் பெறாத சிறு, குறு விவசாயிகள் 55 சதம் மானியம் போக பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 134 செலுத்த வேண்டும். கடன் பெறுபவர்கள் உத்தரவாத மகசூலின் மதிப்பு வரை காப்பீடு செய்து கொள்ளலாம். ஆனால் கூடுதல் தொகை மானியம் கிடையாது. கூடுதல் காப்பீடு தொகை ரூ. 13,040-க்கு பிரிமியம் ரூ. 2,999 செலுத்த வேண்டும். எனவே, சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உடனே அருகிலுள்ள வங்கியில் பிரிமியம் செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் காப்பீடு செய்ய வரும் டிசம்பர் 15-, கடன் பெறும் விவசாயிகள் காப்பீடு செய்ய வரும் டிசம்பர் 31-ம் தேதியும் கடைசி நாள். மேலும் உதவி வேளாண் அலுவலரை அல்லது 04373-235037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment