Monday, November 16, 2015

55 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - அதிகாரிகள் எச்சரிக்கை



நாகர்கோவில், 
வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இதனால் தமிழகத்தில் கடலோர பகுதி மற்றும் அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடலிலும் சூறைக்காற்று வீசும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
கடலில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளனர்.
இந்த அறிக்கை ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 42 மீனவ கிராமங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஊர் தலைவர்கள், பங்கு தந்தைகள், மீனவ சங்க பிரதிநிதிகள், விசைப்படகு, நாட்டுப்படகு சங்க பிரதிநிதிகள் உள்பட பலருக்கும் இந்த அறிக்கையை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
புயல் சின்னம் தீவிரம் அடைந்து வருவதையடுத்து கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களும் கரைக்கு திரும்பி வருகிறார்கள். இதனால் கட்டு மரங்கள், விசைப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நங்கூரம் பாய்த்து நிறுத்தப்பட்டிருந்தது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளதால் தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் உள்ள மீனவர்கள் தங்களது படகுகளையும் வள்ளங்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.


No comments:

Post a Comment