நாவல் பழம் சாகுபடி குறித்து, சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் பி.கல்யாணசுந்தரம் கூறியது: நாவல் மரம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சிறுபான்மை பழப்பயிர். இதன் பழங்களில் கனிமங்கள், சர்க்கரை, புரதங்கள் மற்றும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளன.
மேலும் நாவல் விதைகள் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகின்றன. நாவல் மரக்கட்டைகளைப் பூச்சி மற்றும் பூஞ்சானங்கள் தாக்குவதில்லை. எனவே, அவை ரயில்களில் படுக்கைகள் அமைக்கப் பயன்படுகின்றன. இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்தாலும் வியாபார ரீதியில் குறைந்த அளவே இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. நாவல் மரம் வறண்ட வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் எல்லாவகை மண்களிலும் நன்கு வளரும் தன்மையுடையது. மேலும் உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கியுள்ள நிலங்களிலும் நன்கு வளரும் இயல்புடையது. ராம் நாவல் என்ற வட இந்திய ரகத்தின் பழங்கள் பெரியதாகவும், நீள் சதுர வடிவமாகவும் அடர் ஊதா நிறத்திலும் இருக்கும். கிராமப்புற சந்தைகளில் கிடைக்கும் பழங்கள் உருண்டையாக சதைப்பகுதி சற்று குறைவாக இருக்கும்.
விதைகள் மூலம் கிடைக்கும் நாற்றுகள் அல்லது மொட்டு ஒட்டு கட்டும் முறையில் கிடைக்கும் ஒட்டுச் செடிகள் நடவிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. நாவலுக்கு பொதுவாக உரமிடுவது வழக்கத்தில் இல்லை. இருந்த போதிலும் நன்கு வளர்ந்த மரத்திற்கு 50 கிலோ வரை தொழு உரம் இடுவதால் காய் பிடிப்பு அதிகரிக்கும்.
செடிகளின் இளம் பருவத்தில் தொடர்ச்சியாக நீர் பாய்ச்சுதல் வேண்டும். மரம் வளர்ச்சி அடைந்த பின் ஓராண்டிற்கு 8 முதல் 10 முறை நீர் பாய்ச்சினாலே போதுமானது. மரங்களில் வெüóளை ஈக்கள் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மரத்தைச் சுற்றி சுகாதார நிலையை பராமரித்துப் பாதிக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழித்து விட வேண்டும். இலை தின்னும் புழுக்களை 2 மி.லி. மோனோகுரோட்டாபாஸ் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளித்துக் கட்டுப்படுத்தலாம். பழ அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 2 கிராம் டைத்தேன் எம் 45 மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
நாவல் மரத்தில் நாற்றுகள் 8 முதல் 10 ஆண்டுகளிலும், ஒட்டுச் செடிகள் 6 முதல் 7 ஆண்டுகளிலும் பலன் கொடுக்கும். மேலும் மரங்கள் தொடர்ந்து 50, 60 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். நாற்று மூலம் வளர்ந்த மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 80 முதல் 100 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். ஒட்டுச் செடி மரத்திலிருந்து 60 முதல் 70 கிலோ வரை மட்டுமே பழங்கள் கிடைக்கும். நன்கு பழுத்த தரமான பழங்கள் சந்தையில் கிலோ ரூ.300 வரை விற்பனையாகின்றன என்றார்.
http://www.dinamani.com/agriculture/2015/09/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/article3019466.ece
No comments:
Post a Comment