Tuesday, September 29, 2015

பசுமை புரட்சி!கிராம விவசாயத்தில் சோலார் பயன்பாடு; மின்தேவையை பூர்த்தி செய்யும் சூரிய ஒளி



காரைக்குடி : கிராம விவசாயத்தில் சோலாரின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கண்ணுக்கு தெரியாத ஒரு பசுமை புரட்சி காலூன்றி வருகிறது.

கண் எட்டும் தூரம் விவசாயம் மேற்கொண்டவர்கள், விண் எட்டும் மழை இல்லாததால் மண் வெட்டி போடும் தொழிலையே மறந்தனர். அறுவடை திருநாளை கொண்டாடுவதற்காக தை பொங்கல் வழி பிறந்தது. இன்றோ அது வெறும் விழாவாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விவசாயி வீட்டிலோ வெறும் கஞ்சியும், வெங்காயமும் என்ற நிலை. விண்மழை பொய்த்தாலும் மண் மழையான நிலத்தடி நீர் விவசாயம் ஒரு சில பகுதிகளில் இன்னும் உயிரோட்டமுடன் தான் உள்ளது. ஆழ்துளை கிணறு தோண்டி, அளவுக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சி நிலத்தடியில் வீணாக்கியதை குறைத்து சொட்டு நீர் பாசனம் மூலம் சொற்ப தண்ணீரே செலவாகிறது. எலும்பு மூலம் எப்படி நம் உடல் நேராக நிற்கிறதோ, அதே போன்று விவசாயம் மூலம்தான் நம் நாடும் உயர்ந்து நிற்கிறது. இந்த வாரம் ஆறு மணி கரன்ட், 2 மணி கரன்ட், 10 மணி கரன்ட் என விவசாயத்துக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது எந்நேரமும் வழங்க வழிவகை இருந்தாலும் பற்றாக்குறையால் தண்ணீர் பாய்க்க வழியில்லை. இருக்கின்ற இயற்கை வளங்களில் நாம் இன்னமும் முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பது கடல்நீரும், சூரிய ஒளியும் தான். கடல் நீர் எல்லாருக்கும் சாத்தியமில்லை. சூரிய ஒளி சாத்தியமே. சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின் ஆற்றல் தற்போது மெல்ல மெல்ல மின்தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கிராம அளவில் விவசாயம் மேற்கொள்பவர்கள் இது குறித்து விழிப்புணர்வு பெற்று, தற்போது சோலார் பேனல்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். நாள் முழுவதும் கிடைக்கும் இந்த ஆற்றல் மூலம் தேவைக்கு ஏற்ப தண்ணீர் கிடைக்கிறது. விவசாயமும் செழிக்கிறது என்கின்றனர்.

காரைக்குடி அருகே நங்கம்பட்டி ராஜ்பரத் கூறும்போது: பி.., முடித்துள்ளேன். ஆரம்பத்திலிருந்தே விவசாயத்தில் ஆர்வம் உள்ளது. 45 ஏக்கர் இடம் உள்ளது. இதில் 14 ஏக்கரில் கரும்பு, 4 ஏக்கரில் தென்னை ஒரு ஏக்கரில் கடலை பயிரிட்டுள்ளோம். ஆழ்துளை கிணறு மூலமே விவசாயம் மேற்கொண்டு வருகிறோம். 7 எச்.பி., திறனுள்ள மின் இணைப்பு மோட்டார் உள்ளது. அதன் மூலம் அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் பாய்ச்ச இயலாது என்பதால், அடுத்த இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளோம். ஆனால், இன்னும் கிடைக்கவில்லை. இதனால் 5 எச்.பி., திறன் சோலார் பேனல் அமைத்துள்ளோம். காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சோலார் மின் ஆற்றல் மூலம் மோட்டார் ஓடுகிறது. ஏழு ஏக்கர் கரும்புக்கு பாய்ந்தது போக தென்னைக்கும் பாய்கிறது. சோலார் அமைப்பதற்கு முன்பு இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரூ.18 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தினோம். தற்போது, நான்காயிரமாக குறைந்துள்ளது. இன்னொரு சோலார் பேனல் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம், என்றார்.

சோலார் பேனல் அமைத்து தரும் நிறுவன விற்பனையாளர் சலீம்: மத்திய அரசு நபார்டு வங்கி மூலம் விவசாய நீர் பாசன தேவைக்காக 30 ஆயிரம் சோலார் பம்பு நிறுவ திட்டம் தீட்டியுள்ளது. அத்திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட்டு மானியத்தை வங்கி மூலம் பெற்று பயனாளிக்கு அளிக்கிறோம். 3 எச்.பி., பேனல் அமைக்க ரூ.3 லட்சத்து 47 ஆயிரம் செலவாகும். இதில் அரசு மானியமாக ரூ.ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 600 வழங்கப்படுகிறது. 5 எச்.பி.,க்கு ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 900-ல் 2 லட்சத்து 16 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. நாங்கள் வழங்கும் சூரிய ஒளி தகடுக்கு 25 ஆண்டும், பம்பு கட்டுப்பாட்டு கருவிக்கு 5 ஆண்டும் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சில மாதங்களிலேயே 10 இடங்களில் அமைத்துள்ளோம். விவசாயிகள் சோலார் பேனல் அமைக்க ஆர்வமாக உள்ளனர், என்றார்.
தொடர்புக்கு: 77087 99191.


http://www.dinamalar.com/news_detail.asp?id=1352868

No comments:

Post a Comment