Thursday, September 10, 2015

நெல்லையில் தானியங்கி விதை வழங்கும் இயந்திரம் திறப்பு



தமிழகத்தில் கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக திருநெல்வேலியில் தானியங்கி விதை வழங்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பணம் செலுத்தி விரும்பிய விதைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
வீட்டுத் தோட்டம் அமைப்பதில் ஆர்வமுள்ளவர்கள், விவசாயிகளுக்காக தானியங்கி விதை வழங்கும் இயந்திர வசதி இதுவரை கோவை, மதுரையில் மட்டுமே இருந்து வந்தது. இப்போது, புதிதாக திருநெல்வேலியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், பாளையங்கோட்டையில் வேளாண் உதவி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும், விதைகள், இடுபொருள்கள் வழங்குதல், பரிசோதனை, பரிந்துரை என வேளாண் சார்ந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. இப்போது, வீட்டுத் தோட்டத்தில் ஆர்வமுள்ளோருக்காக தானியங்கி விதை வழங்கும் இயந்திர வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு இயந்திரத்தின் திறப்பு விழா மைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வர் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி. சந்திரசேகரன், இயந்திரத்தை இயக்கி வைத்தார். முதல் விற்பனையை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பி. சிவகுமார் பெற்றுக்கொண்டார்.
இந்த இயந்திரம் காய்கறிகள், மலர்ச் செடிகளுக்கான விதைகள் வழங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை தேவைப்படுவோர் இயந்திரத்தின் வலதுபுறமுள்ள பகுதியில் தேவையான விதைகளைத் தேர்வு செய்து குறிப்பிட்ட எண்ணை அழுத்த வேண்டும்.
பின்னர், 10 ரூபாய் நோட்டை செலுத்திமிடத்தில் வைக்க வேண்டும். இதையடுத்து பணம் உள்ளே சென்று தேர்வு செய்த விதை பாக்கெட்டுகளை வெளியில் அனுப்பும். தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டைப்போல இந்த செயல்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை வேளாண் உதவி மையத்தில் தினமும் காலை 10 முதல் 5 மணி வரை இந்த இயந்திரம் செயல்பாட்டில் இருக்கும்.
முதல்கட்டமாக, கத்திரிக்காய், தட்டைப் பயறு, பீர்க்கன், பாகற்காய், புடலை, மிளகாய், தக்காளி விதைகள் வழங்கப்படும். தொடர்ந்து அடுத்தடுத்து அனைத்து வகை விதைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக உதவி மையப் பேராசிரியர் சி. ராஜாபாபு தெரிவித்தார்.
விழாவில், வேளாண்மைக் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவர், மாணவிகள், விவசாயிகள், வீட்டுத் தோட்ட ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

http://www.dinamani.com/edition_thirunelveli/thirunelveli/2015/09/11/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5/article3022267.ece

No comments:

Post a Comment