Monday, September 7, 2015

விவசாய பணிகளை எளிமையாக்க தொழில்நுட்பம் முக்கியமானது உதவி கலெக்டர் பேச்சு



விவசாய பணிகளை எளிமையாக்க தொழில்நுட்பம் முக்கியமானது என்று உதவி கலெக்டர் ரோகிணி ராமதாஸ் பேசினார்.

பயிற்சி தொடக்க விழா

மதுரையில் மத்திய அரசின் வழிகாட்டுதலோடு இயங்கும் வாப்ஸ் நிறுவனத்தில் விவசாய பட்டதாரி மற்றும் பட்டய மாணவர்களுக்கான பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மதுரை மாவட்ட உதவி கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் எங்களுக்கு இருந்த நிலத்தில் பல ஆண்டுகளாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், மாற்று முயற்சியாக எனது தந்தை அதே மண்ணில் திராட்சையை பயிரிட முனைந்தார். இதையறிந்த மற்ற விவசாயிகள், வறட்சியான அந்த மண்ணில் திராட்சை விளைவது சாத்தியமல்ல என்றனர்.

ஆனால், எனது தந்தை திராட்சை பயிரிடப்பட்டிருந்த பிற இடங்களுக்கு சென்று அதன் நுட்பங்களை கற்று வந்து, எங்களது மண்ணில் திராட்சையை பயிரிட்டார். முடிவில் யாருமே எதிர்பாராத வகையில் அமோகமாக திராட்சை விளைந்தது. தோட்டம் முழுவதும் விளைந்து கிடந்த திராட்சையை காண அருகிலும், சுற்றுவட்டாரங்களிலும் இருந்து விவசாயிகள் திரண்டு வந்து பார்வையிட்டனர். மனது வைத்தால் எந்த மண்ணிலும் விவசாயத்தை சாதிக்க முடியும் என்பதை அனைவரும் நடைமுறையில் தெரிந்து கொண்டனர்.

தொழில் நுட்பம்

பொதுவாக, விவசாயத்தில் தொழில் நுட்பத்தின் பங்கு முக்கியமானது. விவசாய பணிகளை எளிமையாக்க உதவும் வகையில் ஏராளமான தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் விவசாயிகள் தெரிந்து கொண்டு தங்களது சாகுபடியின் போது, அவற்றை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் உதவி பொது மேலாளர் விஜயகுமார் பேசும் போது, மாணவர்களுக்கு அளிக்கப்படும் விவசாய பயிற்சி உயரிய நோக்கங்களை கொண்டதாக இருக்கிறது என்றார். இதில் முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.முருகபிரபு, நபார்டு உதவி பொதுமேலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மைய தொடர்பு அலுவலர் அருள் வரவேற்றார். நிறைவில் வாப்ஸ் தொழில்நுட்ப ஆலோசகர் பொதும்பு சுப்பிரமணியன் நன்றி கூறினார். 


 

No comments:

Post a Comment