பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு பயிரிட்டு ஹெக்டேருக்கு
ரூ.2,000 மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்
கோ.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு பயிர் அனைத்துவகை
நிலங்களிலும் வளரக்கூடியது. இது வடிகால் வசதியற்ற நிலங்களிலும் நன்கு வளரும் பயிராகும்.
களர் நிலத்திலும் தீவிரமாக வளரக் கூடியது. ஒரு ஹெக்டேருக்கு 50 கிலோ விதை போதுமானது.
இது 40- 45-ஆவது நாளில் பூக்கத் தொடங்கும். அப்போது
இதை மடக்கி உழலாம். விதையின் அளவு மிகுதியாகும்போது இதன் தண்டுகள் மெல்லியதாகி இலகுவில்
மக்கும் தன்மை கொண்டதாகும். இது ஒரு போக நஞ்சைக்கு ஏற்றதாகும். இதன் மூலம் மண்ணில்
நிலைநிறுத்தப்படும் தழைச் சத்தின் அளவு 70-80 கிலோ ஆகும். தக்கைப்பூண்டில் இருந்து
ஒரு ஹெக்டேருக்கு கிடைக்கும் தழை உரம் 15 முதல் 20 டன் ஆகும். இதில், வேர் முடிச்சுகள்,
தண்டு உள்ளன. நிலைநிறுத்தப்படும் தழைச் சத்தின் அளவு 150-180 கிலோ ஆகும்.
நெல் நடவுக்கு முன் தக்கைப்பூண்டு விதைத்து 40 முதல்
45-ஆவது நாளில் மடக்கி உழுது உரமாக்கிப் பயன்படுத்த வசதியாக தேசிய வேளாண் வளர்ச்சித்
திட்டத்தின் மூலம் ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment