Thursday, September 10, 2015

1,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான வரைவுக் கொள்கை


தலைநகரில் வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 1,000 மெகாவாட் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான வரைவுக் கொள்கையை தில்லி டயலாக் ஆணையம் (டிடிசி) வியாழக்கிழமை வெளியிட்டது.

இதுதொடர்பாக 15 தினங்களுக்குள் பொதுமக்கள் கருத்தை அறிந்து அதன் பிறகு இறுதி அறிக்கையை தில்லி அரசிடம் ஆணையம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
தில்லியில் சூரிய ஒளி மின்சக்தித் திட்டத்தைச் செயல்படுத்த தில்லி அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கான வரைவுக் கொள்கைத் திட்டத்தை தயாரிக்குமாறு தில்லி அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான தில்லி டயலாக் ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி பல்துறை வல்லுநர்கள், தன்னார்வ அமைப்புகள் உள்பட பல்வேறு துறைப் பிரதிநிதிகளுடன் கொள்கைத் திட்டம் தொடர்பாக தில்லி அரசு ஆலோசனை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, திட்டத்துக்கான வரைவுக் கொள்கையை தலைமைச் செயலகத்தில் தில்லி டயலாக் ஆணையத்தின் துணைத் தலைவர் ஆஷிஷ் கேதான் வியாழக்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
தலைநகரில் வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி 1,000 மெகாவாட் (1ஜிகா) அளவுக்கு மின்சாரத்தையும், அதைத் தொடர்ந்து 2025-ஆம் ஆண்டுக்குள் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும் நோக்கில் இந்த வரைவுக் கொள்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சூரிய எரிசக்தி மூலம் தூய, வாங்கக்கூடிய விலையிலான மின்சக்தியை அளிக்கவும்,
தில்லியின் மின்சாரத் தேவையில் தன்னிறைவு பெறவும் இந்தக் வரைவுக் கொள்கைத் திட்டம் உதவியாக இருக்கும்.
சூரிய ஒளி மின்சக்தி நிலையத்தின் சராசரி ஆயுள்காலம் 25 ஆண்டுகள் என்பதால், 17-18 ஆண்டுகள் குடும்பத்தினர் மின்சாரத்தை இலவசமாகப் பெற முடியும். அதேபோன்று, வர்த்தக, தொழில், அரசு நிறுவனங்களுக்கும் இந்த சூரிய மின் சக்தி திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் ரூபாயைச் சேமிக்க முடியும்.
தில்லியில் தற்போது கூரை மீது அமைக்கப்படும் சூரிய எரிசக்தி மின் கட்டணமானது யூனிட் ஒன்றுக்கு ரூ.6-ரூ.8 வருகிறது. இது அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து அப்படியேதான் இருக்கும். ஆனால், மின் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் மின்சாரத்திற்கான விலை ஆண்டுதோறும் கூடிக் கொண்டுதான் இருக்கும்.
சூரிய மின் சக்தி அமைப்பை அதிகரிப்பதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6-க்கு பெற முடியும். இது அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கும் நீடிக்கும். இந்த சூரிய ஒளி மின்சக்தி உற்பத்திக்கான தகடுகளை அமைப்பதற்காக அரசு எந்தவித மானியமும் அளிக்கக் கூடாது என்று பரிந்துரைத்துள்ளோம். அதேவேளையில், மின்சார உற்பத்தியை மேம்படுத்த ஊக்கத்தொகை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய வரைவுக் கொள்கைத் திட்டமானது டிடிசியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கருத்துகள் பொதுமக்களிடம் இருந்து 15 தினங்களுக்குள் பெறப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக தில்லி அரசிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார் ஆசிஷ் கேதான்.

http://www.dinamani.com/edition_new_delhi/2015/09/11/1000-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-/article3021214.ece

No comments:

Post a Comment