Thursday, September 22, 2016

பப்பாளி சாகுபடியில் விவசாயிகள்... ஆர்வம் மூன்று ஆண்டிற்கு பலன் கிடைக்கிறது


பெரியகுளம் தாலுகா பகுதியில் அதிக பரப்பில் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டிற்கு பலன் கிடைப்பதால் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இத்தாலுகாவில் விவசாயிகள் குறுகிய கால காய்கறி பயிர்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தக்காளி, வெண்டை, கத்தரி மற்றும் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பயிர்களுக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் பப்பாளி சாகுபடி செய்வது லாபகரமான தொழில் என்பதால் இதன் பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் பப்பாளி நாற்றுக்கு மானியம் தரப்படுகிறது. நடவு செய்த 3 மாதங்களில் இருந்து பலன் அறுவடை செய்யலாம். வைரஸ் போன்ற நோய் தாக்குதல் இல்லையெனில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பலன் கிடைக்கும். குறிப்பாக கோடையான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நல்ல விலை கிடைக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். பெங்களூரு மற்றும் கேரள வியாபாரிகள் நேரடியாக வயல்வெளிகளுக்கு வந்து கொள்முதல் செய்கின்றனர். தற்போது ஒரு கிலோ ரூ. 6 முதல் ரூ. பத்து வரை விற்கப்படுகிறது.
சில்வார்பட்டி விவசாயி முத்துக்காமாட்சி கூறுகையில்,“விவசாய விளை பொருட்களை அறுவடை செய்து விற்பனைக்காக மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது.ஆனால் பப்பாளியை கொள்முதல் செய்ய வியாபாரிகள் நேரடியாக வயல்களுக்கு வருகின்றனர். நோய் தாக்குதல் இன்றி முறையாக பராமரித்தால் மூன்று ஆண்டுகள் இதனால் பலன் கிடைக்கிறது. பொருளாதார இழப்பும் தவிர்க்கப்படுகிறது,”என்றார் இவ்வாறு கூறினார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment