Tuesday, September 8, 2015

நெல் சாகுபடி செய்தால் உடனடி மானியம் விவசாயிகளை ஊக்குவிக்கும் வேளாண்துறை



திருவாடானை, :  நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உடனடி மானியம் வழங்கப்படும் என வேளாண்துறை ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.ஆண்டுதோறும் தமிழகத்தில் உணவு தானிய உற்பத்திக்கான இலக்கு அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இலக்கினை அடைவதற்காக வேளாண்துறையினர் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். இருப்பினும் வறட்சி உட்பட பல்வேறு காரணங்களினால் விவசாய பரப்பளவு சுருங்கிக்கொண்டே வருகிறது. இதை தவிர்ப்பதற்காக இந்த பருவத்தில் நெல் சாகுபடி செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு உடனடி மானியம் வழங்க வேளாண்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜ் கூறியிருப்பதாவது: திருவாடானையில் இந்த ஆண்டு நெல் சாகுபடி செய்தால் எதிர்பார்க்கும் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. தங்கள் நிலங்களில் நேரடி நெல்விதைப்பினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எக்டேருக்கு ரூ. 5  ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
 

நீடித்த நிலையான வேளாண் இயக்க திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் மொத்தமாக விநியோகிக்கப்படும். விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள திருவாடானை வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் பெயரை பதிவு செய்ய வேண்டும். மானியத்தொகை இசிஎஸ் மூலமாக வழங்கப்படும் என்பதால் விவசாயிகள் தங்களது பெயரில் வங்கிகணக்கு வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். திருவாடானை விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment