Tuesday, September 8, 2015

விவசாயிகளுக்கு தொலைபேசி வழி சேவை துவக்கம் தமிழகத்திலேயே முதல்முறையாக அறிமுகம்


திண்டிவனம்: தமிழகத்திலேயே முதன்முதலாக, திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வேளாண்மை மற்றும் கால்நடை குறைகள் தீர்க்கும் தொலைபேசி வழி சேவை துவக்கப் பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், தொலைபேசி வழி வேளாண்மை மற்றும் கால்நடை ஆலோசனை சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா, நேற்று அதன் அலுவலக கருத்தரங்கக் கூடத்தில் நடந்தது. நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷீபா வரவேற்றார். திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் வைத்தியநாதன், விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குனர் ரத்தினசபாபதி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் தங்கராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் விழுப்புரம் கலெக்டர் லட்சுமி பங்கேற்று, விவசாயிகளுக்கான தொலைபேசி வழி வேளாண்மை மற்றும் கால்நடை ஆலோசனை சேவையை துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்திலேயே முதன் முறையாக விவசாயிகள் பயன்பெறக்கூடிய இந்த சேவை, அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெற முடியும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 லட்சம் விவசாயிகள் மட்டுமின்றி, மற்ற மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் சேவை துவக்கப்பட வேண்டும்.

விவசாயம் தொடர்பாகவும், கால்நடைகள் தொடர்பாகவும் எந்த சந்தேகங்கள் இருந்தாலும், இந்த தொலைபேசியை தொடர்பு கொண்டால், விளக்கம் அளிக்கப்படும். இந்த சேவையை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் லட்சுமி பேசினார்.

எப்போது பேசலாம்?
திண்டிவனத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள தொலைபேசி வழி வேளாண்மை மற்றும் கால்நடை ஆலோசனை சேவை மையம், ஒவ்வொரு புதன்கிழமையும், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை 2 மணி நேரம் செயல்படும்.
இந்த மையத்தில் வேளாண்மை மற்றும் கால்நடை தொடர்பாக ஆலோசனைகள் வழங்க வல்லுநர்கள் இருப்பார்கள். அந்த தருணத்தில், விவசாயிகள், தங்களது நிறை குறைகளை, 04147-250002 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இதன் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 லட்சம் விவசாயிகள் பயன்பெறலாம் என நிலைய திட்ட ஒருங்கிணைப் பாளர் ஷீபா தெரிவித்தார். இதில், திண்டிவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1337822

No comments:

Post a Comment