Tuesday, July 18, 2017

டானாதோட்டம் முருங்கை கீரைக்கு மவுசு

முருங்கை சாகுபடி மாநிலத்தில் பல இடங்களில் வளமாக இருந்தாலும், குறிப்பிட்ட இடங்களில் சாகுபடியாகும் முருங்கைக்கும், கீரைக்கும் அதிக வரவேற்பு உள்ளது.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இதன் விளைச்சல் அதிகம். தேனி மாவட்டத்தில் கடமலைகுண்டு, மயிலாடும்பாறை ஒன்றியப் பகுதிகளில் பலவிவசாயிகள் இதனை முழுநேரத் தொழிலாக கொண்டுள்ளனர்.
ராஜேந்திரநகர், கண்டமனூர், டானாதோட்டம் பகுதியில் உள்ள முருங்கை கீரை வியாபாரிகளால் அதிகம் விரும்பப்படுகிறது. 
இந்த பகுதியில் இருந்து தினமும் 20 டன் வரை காய வைக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட முருங்கை கீரை கொள்முதல் செய்யப்படுகிறது. 
இதிலும் டானாதோட்டம் முருங்கை கீரைக்கு தான் சந்தை மதிப்பு சற்று அதிகம்.
முருங்கையின் காய்ப்பு காலம் இல்லாத காலங்களில் இதன் கீரை விவசாயிகளுக்கு வாழ்வு தருகிறது. 
இதன் கீரை 50 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை சீசனுக்கு தகுந்தவாறு விற்பனையாகிறது.
இந்த கீரையில் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி' சத்துகள் உள்ளது. செயற்கை உரம், பூச்சி மருந்து பயன்படுத்தப்படாத நாட்டு ரக முருங்கை மரத்தின் கீரைக்கு மருத்துவ உலகிலும் அதிக வரவேற்பு உள்ளது.
மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட கீரையை காயவைத்து அதில் கழிவுகள், கொப்புகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்ட பின் அவற்றை மதுரை, திண்டுக்கல் பகுதி வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். 
இவை அரைக்கப்பட்டு பவுடராக மருந்துக் காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
டானாவூரில் முருங்கை கீரை சாகுபடி மற்றும் கொள்முதல் செய்யும் சுப்புராஜ் கூறுகையில், இயற்கை உரம் பயன்படுத்தினாலும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப டானாதோட்டம் பகுதியில் உள்ள முருங்கை கீரையின் சுவையும், தன்மையும் மற்ற இடங்களில் இல்லை. 
அதனால் இந்த பகுதியில் உள்ள கீரைக்கு முக்கியத்துவம் உண்டு. 
கீரையை பக்குவப் படுத்தி எடுப்பது சற்று சிரமமானது. இந்த பகுதியில் மட்டும் தினமும் 4 டன் வரை கீரை கிடைக்கிறது. தற்போது ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. மழை காலம் துவங்கினால் இதன் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக கீரை சாகுபடி பல விவசாயிகளுக்கு நல்ல வாழ்வாதாரமாக உள்ளது,'' என்கிறார்.
தொடர்புக்கு 76397 92103
டபிள்யு.எட்வின்
துரை.


Source : Dinamalar

No comments:

Post a Comment